tamilnadu

img

நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய நீதிபதி சஸ்பெண்ட்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய புகாரில் நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்- 1 நீதிமன்றம் சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரிபவர் நாகர்கோவிலை சேர்ந்த சி.சாரதி(38). இவர் நவம்பர் 4 அன்று  பணியிலிருந்த போது நீதிபதி வழக்கு தீர்ப்பு தொடர்பாக டிக்டேட் செய்ய, அதனை ஸ்டெனோ டைப் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நீதிபதி நிலவேஸ்வரன் ஸ்டெனோவாக பணிபுரியும் சாரதியிடம் இதற்கு முன்பு உள்ள பழைய மாடல் ஒன்றை வைத்து டைப் செய்ய கூறியுள்ளார்.பின்னர் அவர் அளித்த முன்மாதிரியை வைத்து டைப் செய்த காகிதத்தை நீதிபதியிடம் வழங்கியுள்ளார். அதில் பிழைகள் இருந்ததால், நீதித்துறை நடுவர் என்.நிலவேஸ்வரனால் தாக்கப்பட்டு காயமடைந்தார். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய சாரதியை சிகிச்சைக்கு அனுப்பாமல் மீதி அலுவலக பணிகளையும் முடித்து விட்டு அனுப்பியுள்ளார். பின்னர் சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நீதித்துறை நடுவர் தாக்கியதையும்  மனிதாபிமானமற்ற முறையில் சிகிச்சைக்கு அனுப்பாதது குறித்தும் மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதியிடம்  சாரதி முறையீடு செய்தார். நீதித்துறை நடுவரின் செயலைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு, மாதர் சங்கத்தின் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி  விசாரணை மேற்கொண்டார்.பெண் ஊழியரை தாக்கிய நடுவர் மன்ற நீதிபதி என்.நிலவேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.:

 

;