tamilnadu

img

தொழிலதிபர் பிறந்தநாள் கோலாகலம்... ஊரடங்கை மீறிய காவல்துறையினர்

திருவில்லிபுத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜபாளையம் நகரச் செயலாளர் பி. மாரியப்பன்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இராஜபாளையத்தில் ஒரு தொழில் அதிபரின் பிறந்தநாள் விழா இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை அகற்றிவிட்டு காவல்துறையின் நிகழ்ச்சி போல அங்கு நடத்தப்பட்டுள்ளது.காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்குவது கூட நிகழ்ச்சியாக நடத்துவது கிடையாது. .ஆனால் வெள்ளியன்று நடைபெற்ற குவைத் ராஜா  பிறந்தநாள் விழா பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்புடனும், காவல்துறையினரின் பங்கேற்புடனும் எந்தவித சமூக விலகலும் இல்லாமல் நடைபெற்றது.    

இவருடைய பிறந்த நாள் விழாவில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் காவல்துறையினரின் லெவன்த் பட்டாலியன் வேனில் காவல்துறையினரால் வந்து இறக்கி வினியோகம் செய்யப்பட்டது. அவசரப் பணிகளுக்காக வருவோரின் பைக்கை  கூட காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்கக்கூடிய சூழ்நிலையில், தொழிலதிபரின் பிறந்தநாளை காவல்துறையினரே நடத்தியது என்பது ஊரடங்கு மீறிய செயலாகும்.எனவே காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது  மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

;