tamilnadu

img

கொடுமணல் அகழாய்வில் பண்டைய நாணயங்கள் கண்டெடுப்பு

திருப்பூர்:
கொடுமணல் அகழாய்வில் பழங்கால நாணயங்கள் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளன. துளையிடப்பட்ட இந்த நாணயங்களின் துல்லியமான காலம் உள்ளிட்ட விபரங்கள் தொல்லியல்துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்று கொடுமணல் அகழாய்வு கள அலுவலரான, தொல்லியல் துறை இயக்குநர் ரஞ்சித் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடிமற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில்தமிழக தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நொய்யல் ஆற்றங்கரை யில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுமணல் கிராமத்தில்கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் அக ழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கொடுமணல் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையை ஒட்டி பாண்டியன் நகரில் தொல்லியல் துறை இயக்குநரும், இந்த அகழாய்வுப் பணியின் கள அலுவலருமான ரஞ்சித் தலைமையில் கோவைமண்டல உதவி இயக்குநர் நந்தகுமார், தொல்லியல் ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அகழாய்வு செய்ய வேண்டிய மேற்பரப்பில் குறியீடு செய்து, அப்பகுதியைச் சுத்தப்படுத்தி அங்கு பொதிந்திருக்கும் பழங்காலப் பொருட்களை சேகரிக்கும் பணி இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்டைக் கால, துளையிடப்பட்ட நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் வேறு சில பொருட்களும் சேகரிக்கப்பட்டு இருப்பதாக கள அலுவலர் ரஞ்சித் தெரிவித்தார். தற்போது இரண்டடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் ஆழமாகத் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே புதுவை பல்கலைக்கழக ஆய்வாளர் ராஜன்உள்ளிட்டோர் மேற்கொண்ட ஆய்வில் இரும்புகள், பளிங்கு கற்கள், கல்மணி சங்குகள், பட்டை தீட்ட பயன்படும் கருவிகள், ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் மனித எலும்புகள், சரளைமண் ஓடுகள், வீடுகளின் தரைத்தளம், சுடுமண்ணால் ஆன நெசவுத் தொழில் பயன்பாட்டு பொருட்களும்சேகரிக்கப்பட்டுள்ளன.தற்போது கிடைக்கும் கூடுதல் பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்தும்போது கொடுமணல் நாகரிகத்தின் துல்லியமான காலம், அதன் சமூக வாழ்க்கை, வர்த்தகத் தொடர்பு உள்ளிட்ட விபரங்களைத் தெளிவாக நிறுவ முடியும் என்றும் இத்துறையைச் சேர்ந்தோர் கூறினர். செப்டம்பர் மாதம் வரை கொடுமணல் அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கள அலுவலர் ரஞ்சித் தெரிவித்தார்.

;