tamilnadu

img

கொரோனா பாதிப்பு: திருப்பூரில் பட்டினியில் பரிதவிப்போருக்கு சிபிஎம் சிஐடியு, வாலிபர் சங்கத்தினர் ஆதரவுக் கரம்

திருப்பூர், ஏப். 7 – கொரோனா ஊரடங்குத் தடை காரணமாக திருப்பூரில் முடக்கப்பட்டு, பட்டினியில் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு, வாலிபர் சங்கத்தினர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்த கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் நகரமான திருப்பூரில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல், இங்கேயே தங்கி இருக்கவும் வழியில்லாமல் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டனர். ஊரடங்கை அமல்படுத்திய மாவட்ட நிர்வாகமோ, திருப்பூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் கடமையை அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதுடன் நிறுத்திக் கொண்டனர்.

இந்த ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி கட்டுமானம், விசைத்தறி, சுமைப்பணி உள்ளிட்ட முறைசாரா தொழில்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களும் வேலைவாய்ப்பும், வருமானமும் இழந்து 21 நாட்களை எப்படிக் கடத்துவது என்று கலக்கம் அடைந்தனர். இதற்கு தெளிவான நிவாரண அறிவிப்பு ஏதும் அரசால் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு, வாலிபர் சங்கம் ஆகிய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கினர். தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் பட்டினிச் சூழலில் தவிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் பற்றி கணக்கெடுத்து நிவாரணம் வழங்கும் முயற்சியில் இறங்கினர்.

ஒருபுறம் உணவுப் பொருட்கள், காய்கறிகளை வாய்ப்புள்ளவர்கள், நன்கொடையாளர்களிடம் சேகரித்து பட்டினி கிடப்போருக்கு வழங்கியதுடன், இதுபோல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள் பற்றிய விபரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்து அவர்கள் மூலம் உணவுப் பொருட்கள், நிவாரண நடவடிக்கைகள் கிடைக்கவும் உதவினர். குறிப்பாக பழவஞ்சிபாளையத்தில் 13 குடும்பங்கள், ஐஸ்வர்யா நகரில் 30 குடும்பங்கள், ஆண்டிபாளையத்தில் 350 பேர், முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் 200 பேர், புது பஸ் நிலையம் பகுதியில் 60 பேர், அம்பேத்கார் நகர் பகுதியில் 800 பேர், பூம்புகாரில் 24 பேர், குளத்துப்புதூரில் 60 பேர், பிள்ளையார் நகர், கோயில்வழி பகுதியில் 150 பேர், செட்டிபாளையத்தில் 40 பேர், செவந்தாம்பாளையத்தில் 150 பேர், அங்கேரிபாளையம், வெங்கமேடு பகுதியில் 1200 பேர், சின்னக்கரை கரைப்புதூரில் 150 பேர், சக்திநகர், கங்காநகர் பகுதியில் 160 பேர், காந்திநகரில் 68 பேர், விஜயபுரி கார்டனில் 75 குடும்பங்கள், ஆத்துப்பாளையத்தில் 20 குடும்பங்கள், நெசவாளர் காலனியில் 60 குடும்பங்கள், ஸ்ரீநகர், பிச்சம்பாளையம் பகுதியில் 3000 பேர், பூண்டி பெரியாயிபாளையம் பகுதியில் 12 குடும்பங்கள், குன்னாங்கல்பாளையத்தில் 30 பேர், நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள், கோல்டன் நகர், பவானிநகர் உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் 1500 பேர், புதுப்பாளையம் வஞ்சிபாளையம் பகுதியில் 300 பேர் உள்பட திருப்பூர் மாநகரிலும், சுற்று வட்டாரப் பகுதியிலுமாக குறைந்தபட்சம் 12 ஆயிரம் பேர் கணக்கெடுக்கப்பட்டு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் பட்டியலைச் சமர்ப்பித்து, மாவட்ட நிர்வாகத்திடம் அவர்களுக்கான நிவாரண உதவி பெற ஏற்பாடு செய்தனர்.

இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சுமார் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்பட்டது. இது தவிர, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே நன்கொடையாளர்களிடம் அரிசி, கோதுமை மாவு, காய்கறிகள் ஆகிய உணவுப் பொருட்களைச் சேகரித்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகப் பகிர்ந்து வழங்கினர். திருப்பூரில் 12 ஆயிரம் பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் நிவாரண உதவி கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து இதுபோல் பாதிக்கப்பட்டிருப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதற்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்.

தன்னார்வத் தொண்டர்களாக..
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிருமி நாசினி தெளிக்கும் கருவிகளை வாங்கி பல்வேறு பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அங்குள்ள புதிய அரசு மருத்துவமனையில் இருந்து படுக்கை உள்ளிட்ட உபகரணங்களை பழைய மருத்துவமனைக்கு வாகனத்தின் மூலம் கொண்டு சென்று கொரோனா சிகிச்சை வார்டு அமைப்பதற்கும் உதவி செய்துள்ளனர். பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் 200 குடும்பங்களுக்கு சோப்புகள் வழங்கப்பட்டன. 

இத்துடன் நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குடும்பங்கள் 75 எண்ணிக்கை கணக்கெடுத்து நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன், அவர்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்தனர். முன்னதாக கொரோனா தொற்று பரவல் பிரச்சனை தலைதூக்கியபோதே திருப்பூரில் 1000 சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 30 ஆயிரம் துண்டறிக்கைகள் வீடு, வீடாக வழங்கப்பட்டன. இவை தவிர மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள், தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி
 மக்களுக்கான நிவாரணப் பணிகள் மட்டுமின்றி, கொரோனா எதிர்ப்புக் களப் போராளிகளாக மாநகரில் தூய்மைப் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினி மருந்து ஆகியவை வழங்கவும், அவர்களுக்கு அரசின் சிறப்பு ஊதியம் கிடைக்கவும் சிஐடியுவினர் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ததாக சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கூறினார்.

திருப்பூர் மாநகரம் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி அவிநாசி, உடுமலை, பொங்கலூர், தாராபுரம், ஊத்துக்குளி என மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இது போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  (ந.நி.)

;