tamilnadu

img

நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது நரேந்திர மோடி அரசு

திருநெல்வேலி:
நாட்டை அழிவுப்பாதைக்கு மோடி அரசு அழைத்துச் செல்கிறது. இந்த அரசின் கொள்கைகளின் பின்னால் உள்ள வர்க்க அரசியலை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் குறிப்பிட்டார். 
திருநெல்வேலியில் சனியன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டை துவக்கி வைத்து தபன்சென் மேலும் பேசியதாவது: தமிழக மின் அரங்கத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முன்னணி பாத்திரம் வகித்து வருகிறது. இன்று நாடு சந்தித்துவரும் பிரச்சனைகளில் நாம் எத்தகைய பாத்திரம் வகிக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். அரசின் கொள்கைகளை எதிர்த்து மட்டும் போராடுவதால் நாம் விரும்பும் மாற்றம் ஏற்பட்டு விடாது. அந்த கொள்கைகளின் பின்னால் உள்ள வர்க்க அரசியல் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதற்கு எதிராக போராட வேண்டும். உலகில் தொழிலாளி வர்க்கம்தான் திரட்டப்பட்ட மிப்பெரிய பகுதி. வரலாற்றை மாற்றுவதில் தொழிலாளி வர்க்கத்துக்கு மிகப்பெரிய பங்குள்ளது. 

தீய சக்திகளிடம் ஆட்சி
அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணியையும் தமிழ்நாட்டில் தோற்கடித்த தமிழக தொழிலாளர் வர்க்கத்துக்கும் மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவானபோக்கு இருந்தபோது தமிழக வாக்காளர்களால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த நிலை தொடர வேண்டும். ஆனாலும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு மிருகபலம் கிடைத்துள்ளது. நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் தீய சக்திகளிடம் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இந்த அரசின் கொள்கைகள் இந்தியாவின் இதர பகுதிகளைப்போல் தமிழகத்தையும் பாதிக்கவே செய்யும். எனவே, பாஜகவை வெற்றி பெறச்செய்த இதர பகுதிகளிலும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விடும் பொறுப்பு நமக்கு உள்ளது. 

நாடாளுமன்றத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்தங்கள் வந்தபோது அதற்கு எதிராக எட்டு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். அதே நேரத்தில் இந்த சட்ட திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களில் பிஎம்எஸ் தவிர இதரதொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாசிஸ்ட்டுகள் தொழிற்சங்க உரிமைகளின் மீதுதான் முதல் தாக்குதலை நடத்துவார்கள். மோட்டார் வகனசட்டதிருத்த மசோதா, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் அவற்றுக்கு எதிராக வாக்களித்தனர். எத்தனை சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தாலும் தொழிற்சாலைகளில் அமலாக்கும்போது தொழிலாளர்கள் அதற்கு எதிராக போராடவே செய்வாளர்கள். 

திசை திருப்பும் பாஜக
ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியில்நாம் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம்.  பிரச்சனைகளை திசைதிருப்ப ஆளும் பாஜக முயன்று வருகிறது. பாஜகஅரசு செய்யும் சதிகளை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் மின் உற்பத்தி3 லட்சம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. அதில் 40 சதவிகிதம் அளவுக்கே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுகிறார்கள். ஆனால் அதன் உற்பத்தியை பயன்படுத்தாமல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துஅதிக விலைகொடுத்து வாங்குகிறார்கள். மின்சாரத்தை முழு அளவில் பயன்படுத்த முடியாத நிலையில் நமது பொருளாதார நிலை உள்ளது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ரத்தம் கக்கும் நிலைக்கு முதலாளிகள் கொண்டு சென்றுள்ளனர். ரத்தம் கக்கும் நிலையில் இந்த வங்கிகள் உள்ளதாக கூறி அவற்றை தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். அமைச்சரின் மகன்கள், மாமனார்கள் எல்லாம் வங்கிகளை வாங்க போட்டிபோடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் மூன்று நாட்கள்மூடப்படுகின்றன. இதனால் முதலாளிகளுக்கு எந்த இழப்பும் இல்லை தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக அரசு மக்களிடம் நம்பிக்கை குறித்துபேசுகிறது. ஆனால் அவர்களது நம்பிக்கைஎல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. பாஜக அரசு கார்ப்பரேட் திருடர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறது. அரசின் கஜானாவுக்கு வரவேண்டிய எட்டு லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளால் சூறையாடப்பட்டுள்ளது. 

பாதுகாப்புத்துறை வேலைநிறுத்தம்
லட்சக்கணக்கானோரின் வாழக்கையை பறிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தம்,பயங் எவரையும் எவ்வித விசாரணையும் நடத்தாமல் சிறையில் அடைக்க வழிவகுக்கும்பயங்கரவாத தடுப்பு சட்டம், நம்முடையதொடர் முயற்சியின் விளைவாக கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட திருத்தம் என மக்களைப்பாதிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை உட்பட இவற்றையெல்லாம் ஊடகங்கள் முழுவதும் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் உள்ள வர்க்க அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் சுயசார்பு பொருளாதாரம் நீர்த்துப்போகிறது. கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. தனியார் மயத்துக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 20 முதல் ஒருவார கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் அத்தகைய ஆறு தொழிற்சாலைகள் உள்ளன. அவர்களுக்கு தமிழக தொழிலாளி வர்க்கம் ஆதரவளிக்க வேண்டும். 

ஊதிய உயர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் மின் ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலாக வேண்டும். அரசு ஓய்வூதியத்தை வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று பாரக்கிறது. நவம்பர் 30இல் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட வேண்டும். ஒரு நியாயமான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று நாம் முயற்சிக்கிறோம்இ சரியான முறையில் நாம் போராடவில்லை என்றார் ஊதிய உயர்வை பெற முடியாது. மின்சார மசோதா-2018 க்கு எதிராக நாம் போராடினோம். தமிழ்நாடு மின்சார வரரியத்தை மூன்றாக பிரித்தபோதிலும் நமது தொடர்ச்சியான போராட்டங்களால் ஒன்றாகவே செயல்பட வைத்துள்ளோம். மின்சாரம் அத்தியாவசிய சரக்கு. இதில் கட்டாயம் லாபம் கிடைக்கும். தனியார் லாபத்துக்காக திட்டமிட்டு நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். யார் நம்முடைய சரியான எதிரி என்பதை அடையாளம் காண வேண்டும். இந்துக்களுக்கு முஸ்லீம் எதிரி. முஸ்லீம்களுக்கு இந்துக்கள் எதிரி என்பதல்ல. சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் எதிரான முரண்பாடுதான் முக்கியமானது. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒன்றுபட்டு நின்றால் எதிரிகள் நம் காலில் வந்து விழுவார்கள் என்று பேசினார்.தபன்சென் உரையை சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழாக்கம் செய்தார்.

;