tamilnadu

img

மாநிலங்களவைத் தேர்தலில் எனது மனு நிச்சயம் ஏற்கப்படும்

திண்டுக்கல்:
மாநிலங்களவைத் தேர்தலில் எனது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.திண்டுக்கல்லில் திங்களன்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:-

என் மீது தேசத் துரோக வழக்கு 124 ஏ பிரிவின் கீழ் தொடரப்பட்டது. இந்த வழக்கில் எனக்குத் தண்டனை வழங்கப்படாது என்று நம்பினேன். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இதே பிரிவின் கீழ் மகாத்மா காந்தி,பாலகங்காதர திலகர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டு தண்டனை பெற்றா ர்கள்.  காலனி ஆதிக்க ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் நீக்கவில்லை. சட்ட திருத்தம் குறித்த ஆணையம் அமைக்கப்பட்ட போது இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென அந்த ஆணையம் பரிந்துரைத்தது. அப்போதும் நீக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் பலர் மீது இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டாலும் யாரும்  தண்டிக்கப்பட வில்லை. நான் மட்டும்  தேசத் துரோக வழக்கில்  ஓராண்டு தண்டனை பெற்றுள்ளேன் நான் என்ன தேசத் துரோகம் செய்தேன்?

மகாத்மா காந்தியைப் போல உருவம் செய்து மீண்டும் சுடுவோம் என்று சுட்ட வர்கள், அவரது உருவப்படத்தைக்  கொளுத்தியவர்கள், நாதுராம் விநாயக் கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்றவர்களெல்லாம் தேச பக்தர்களாக இருக்கிறார்கள். ஊழல் தடுப்புச் சட்டம், போதைப் பொருள்தடுப்புச் சட்டம், பெண்களுக்கு கேடு செய்யும்பிரிவு, மதப் பிரச்சனை தொடர்பான சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டா லோ, அபராதம் விதிக்கப்பட்டாலோ தான்அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. சட்டம் மிகத் தெளிவாக இருக்கிறது. எனவே எனது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட விரும்பினால் மதிமுகவுக்கு வாய்ப்பு என்று  கூறினார்.திமுக  முன்னெச்சரிக்கையாக என். ஆர்.இளங்கோவை வேட்புமனு தாக்கல் செய்யச்சொல்லியிருக்கிறது. மனு பரிசீலனை நாளன்றும் ஒரு வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளது. அதனால் எனது வழக்கறிஞர் தேவதாஸ் செல்வார். இந்த நிலையில் தேவையற்ற விவாதங்களுக்கு மதிமுக தொண்டர்கள் இடம் கொடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் பேட்டியின் போது மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், நகர் செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

;