tamilnadu

img

அரசு அதிகாரிகளே கொரோனா நிவாரண டோக்கன் விநியோகிக்க வேண்டும்... சிபிஎம் கோரிக்கை 

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்திற்கான டோக்கனை ஆளுங்கட்சியினர் கைகளில் தராமல், அரசு அதிகாரிகளே நேரடியாக விநியோகம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

"தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு அயராது பாடுபட்டு வரும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, இன்ன பிற அரசுத்துறை ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது. மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வருகிறார் என்ற ஆறுதலான செய்தி வந்துள்ளது. தன்னுயிரை பாராமல் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். 

அதே நேரத்தில், தமிழக அரசின் சார்பில், தஞ்சை மாவட்டத்தில், கொரோனா நிவாரணப் பொருள் மற்றும் ரொக்கம் 1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினசரி ஒரு அங்காடியில் 100 டோக்கன் வழங்கப்பட்டு, பணம், பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம் பகுதியில் உள்ள பகுதி நேர அங்காடியில் ஏப்.4 சனிக்கிழமை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதே நிலை மாவட்டத்தின் பிற இடங்களில் இருப்பதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அனுமதி டோக்கனை அதிகப்படுத்துவதோடு, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மொத்தமாக டோக்கன் பெற்றுச் சென்று, பொதுமக்களிடம் டோக்கன் விநியோகம் செய்வதாக பரவலாக புகார் கூறப்படுகிறது. பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளில் அமர்ந்து கொண்டு தலையீடு செய்து வருகின்றனர். மேலும், குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு டோக்கன் கிடைக்காத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு, அரசு அலுவலர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யவும், அங்காடிகளில் ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் அப்புறப்படுத்தவும், இதுவரை டோக்கன் வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அங்காடிகளுக்கு அனுப்பப்படும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் எடை குறைவாக உள்ளது என்றும், இதனா‌ல் அங்காடி விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனா‌ல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்தையும் கவனத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;