tamilnadu

img

சாதிய ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக!

தஞ்சாவூர்:
சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் ஜனநாயக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு ஆபத்துக்களை கொண்ட,  ஏழைகள், கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை பாதிக்கக்கூடிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்று, புதிய அறிவுசார் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும். கும்பகோணத்தில் இறந்த தலித் உடலை அடக்கம் செய்வதில் ஆதிக்க சக்திகள் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதாளச் சாக்கடை பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகள் அதிகரித்து உள்ளதால், இதுபோன்ற பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், தலித் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், வெளிமாநில மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்து தலித் மாணவர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்கு முன்மாதிரியாக திகழும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை மாநாடு பாராட்டுகிறது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பன்னியாண்டி மற்றும் குறவர் சமூக மக்களுக்கான இனச்சான்று பெறுவதில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து, அவர்களுக்கு எஸ்.சி., சாதிச் சான்று வழங்க வேண்டும். குதிரை வண்ணார் சமூக மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறை, இழிநிலை நீக்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனமாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக கைமாறிய பஞசமி நிலங்களை, அடையாளம் கண்டு, அதனைக் கைப்பற்றி மீண்டும் தலித் மக்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;