tamilnadu

img

‘தீண்டாமையின் ஆணி வேரை அறுக்கும் பணியில் நாம் இருக்கிறோம்’

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிறப்பெடுத்த காலத்தில் அதன் முதல் அறிக்கையிலேயே, நாட்டின் விடுதலையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அவசியம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு கீழத் தஞ்சையில் சாதியப் பிரச்சனை ஓரளவுக்கு மட்டுப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் கம்யூனிட்டுகள்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

60 ஆண்டுகளுக்கு முன்பாக வாயற்ற பூச்சிகளாக இருந்தவர்களை, சாணிப்பாலும் சவுக்கடி கொடுமைகளும் அனுபவித்து வந்தவர்களை ‘அடித்தால் திருப்பி அடி’ என்று கற்றுக் கொடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.
தமிழகத்தின் எட்டுத் திக்கிலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எங்கே ஒரு தலித் பாதிக்கப்பட்டாலும் களத்தில் நிற்கும் போராளிகள் இங்கே கூடியிருக்கிறார்கள். இன்றைக்குக்கூட கும்பகோணத்துக்குப் பக்கத்தில் தலித்மக்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழியில் தாக்கப்பட்டார்கள் என்ற ஒரு செய்தி நம் கவனத்திற்கு வந்திருக்கிறது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கே சாதி இருக்கிறது. சாதி தோன்றிய காலத்திலிருந்தே, அதை எதிர்த்து வந்த வரலாறும் நமக்கு உள்ளது. சாதியாவது ஏதடா எனச் சித்தர்கள் கேட்டார்கள். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று முழங்கிய மரபும் நமக்கு உண்டு.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார் வாழ்ந்த மண்ணில்தான் இன்னமும் சாதியக்கொடுமை இருக்கிறது. நாளுக்குநாள் வெவ்வேறு வடிவங்களில்  தலித் மக்களை உக்கிரமாகத் தாக்குகிறது.இந்தத் தருணத்தில் சாதியம் குறித்த ஒரு விரிவான உரையாடலை நடத்த வேண்டுமென  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சொல்லியிருக்கிறார். அதில் நான் நூறு சதவிகிதம் உடன்படுகிறேன். பிராமணியம், சனாதனம், இந்து, இந்துமதம், வர்ணாசிரம் பற்றியெல்லாம் நிறையப் பேசப்படுகிறது. இந்து மதம் இல்லாமல் சாதியம் இல்லை. வர்ணாசிரமம் இல்லாமல் சாதியம் இல்லை. ஆனால், சாதியம் என்பது ஏன் வந்தது என்று சொன்னால் அதற்கு மேலேயும் போக வேண்டியிருக்கிறது. மனிதன் பிறக்கும் போதே சாதி இருந்ததா? பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் சாதி இல்லாமல் தானே வாழ்ந்தான்? ஆரியர்கள் தான் சாதியைக் கொண்டுவந்தார்கள் என்றால் ஆரியர்கள் வாழும் நாட்டில் சாதி இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.  அப்படியென்றால் இங்கு ஏன் சாதி வந்தது?

என்றைக்கு சமூகம் உடைமை வர்க்கமாகவும், உழைப்பாளி வர்க்கமாகவும் பிளவுபட்டதோ அந்த இடத்தில் தான் வந்தது. உழைப்பாளி மக்களை, அடக்கி ஆள்வதற்கு இந்தியாவில் உள்ள உடைமை வர்க்கம் கண்டுபிடித்த ஆயுதம்தான் சாதி.
உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜசோழன் தான் இங்கே உள்ள தலித்துகளை, உழைப்பாளி மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை  அடக்கி ஆண்ட கொடுமை நடந்தது. அதே நேரத்தில் மக்கள் பல மன்னர்களை அடித்து கொலை செய்த வரலாறும் உள்ளது. கொடுமைப்படுத்திய மன்னனை உழைப்பாளி மக்கள் அடித்தே கொலை செய்தார்கள். பல ஜமீன்தார்கள் தவிடு பொடியாக்கப்பட்டனர். கடைசியாக இங்கே பிராமணர்களைக் கொண்டு வந்து குடியேற்றி கோவில்களைக் கட்டி, உழைப்பாளிகளை மூளைச்சலவை செய்த காரணத்தில்தான் இங்கே சாதியக் கொடுமை தலைவிரித்தாடியது. இங்கே காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், சீனிவாசராவ் ஆகியோரின் படங்களை வைத்துள்ளோம். இவர்களின் கோட்பாடுகளை இணைத்து நாம் முன்னேற வேண்டும். தீண்டாமை இருக்கும் இடத்தில் அதன் ஆணிவேரையே அறுக்கும் பணியில் நாம் இருக்கிறோம். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பாதுகாப்பு அரணாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி இருக்கும்.
தஞ்சை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து...

;