tamilnadu

img

மார்க்சிஸ்ட்டுகளும், பெரியாரிஸ்ட்டுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

சேலம்:
மார்க்சிஸ்ட்டுகளும்,  பெரியாரிஸ்ட்டுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சேலத்தில், திராவிட கழகத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் பேசியதாவது :
திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று சேலத்தில் துவங்கப்பட்டது. அதே தேதியில் இங்கு பவள விழா மாநாடு நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. திராவிட கழகத்தை தலைமை தாங்கி நடத்திய பெரியார் இல்லையென்றால் தமிழகத்தின் முகத்தோற்றத்தை கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்ட சிறந்த தலைவராக பெரியார் இருந்துள்ளார். பெரியாருக்கு பின் இயக்கம் இருக்குமா. இருக்காதா என பேசப்பட்டபோது அவருக்கு பின் மணியம்மை தலைமை தாங்கி இந்த பகுத்தறிவு இயக்கத்தை நடத்தினார். தற்போது இந்த இயக்கத்தை ஆசிரியர் வீரமணி முன்னின்று நடத்தி வருகிறார். அன்றைய பெரியாரை பெற்றெடுத்தது ஈரோடு என்றால், இன்றைய பெரியாரான வீரமணியை பெற்றெடுத்தது கடலூர். அந்த  மண்ணில் இருந்து வந்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். அன்று பதினோரு வயதில் துவங்கி, இன்று பவள விழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தொடர்ந்து நூற்றாண்டு விழாவையும் தலைமையேற்று அவர் நடத்த வேண்டும். 

தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால்  தமிழகத்திற்கு இன்றும் நூற்றுக்கணக்கான பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். தற்போது வேதாரணியத்தில் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பொதுவுடமை போராளிகள் ஜீவானந்தம், ராமமூர்த்தி ஆகியோர் இங்கு வாழ்ந்தவர்கள். தமிழகத்தில் ஒருபோதும் காவி காலூன்ற முடியாது. தமிழகத்தில் தாமரை மடியுமே தவிர, தாமரை மலராது.தமிழகத்தில் அன்றைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரியார் இருந்தார். அந்த கட்சி கடைப்பிடித்த வர்ணாசிரம கொள்கை பிடிக்காமல் திராவிட கழகத்தை துவக்கினார். பொதுவுடைமை கருத்துகளுக்கு பெரியார் என்றுமே ஆதரவு தந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலில்  தமிழில் குடியரசு பத்திரிகையில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்பதை பெருமையாக கருதுகிறேன். அவரின் சில கொள்கையினால் தமிழகம் மிகுந்த பயன்  பெற்றுள்ளது. இராஜாஜி இந்தி மொழியை தமிழகத்தில் கொண்டுவர முயன்றார். அப்போது அதை தடுத்து நிறுத்திய பெருமை பெரியாரை சாரும்.

1938 ஆம் ஆண்டில் இந்தியை எதிர்த்து தமிழை பாதுகாத்தவர் தந்தை பெரியார். 1951ல் அரசியல் சாசனம் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அதில் இடஒதுக்கீடு பிரிவு இல்லாததை கண்டித்து, அதில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டத்தை நடத்தி முதன் முதலில் சட்டத்திருத்தத்தை செய்ய வைத்தார் தந்தை பெரியார். அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் இன்று இட ஒதுக்கீடு இல்லாமல் போய் இருக்கும்.ஆணும், பெண்ணும் சமம் என்று கூறி போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றவர் பெரியார். குழந்தை திருமணத்தை எதிர்த்து போராடினார்.  விதவை திருமணத்தை ஆதரித்து பேசினார். சாதி ஒழிப்புக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர் பெரியார். எழுத்து சீர்திருத்தம் செய்தவர் பெரியார். தீண்டாமையை ஒழிக்க முயன்றவர் பெரியார். தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய பங்காற்றியவர் தந்தை பெரியார்.அவரின் மரண சாசனத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை என வருத்தப்பட்டார். அவருக்கு பின் அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்றிட நினைத்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் 168 இதர சாதியினர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு பெரியாரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தனது நாட்களை எண்ணிக்கொண்டுள்ளது. முதல்வர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எதற்காக இந்த பயணம் என்று தெரியவில்லை. இந்தியாவில் அமைதியாக இருந்த காஷ்மீர் இன்று கலவர பூமியாக மாறியுள்ளது. பாஜக ஆட்சியில் அரங்கேறிய பொருளாதார வீழ்ச்சியை மறைக்க மக்களை திசைதிருப்ப ஏற்படுத்தப்பட்ட நாடகம் இது. சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் இருந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர். தமிழகத்திற்கும் இந்த நிலை வரும். சிறுபான்மை மக்களுக்கு இன்று பாதுகாப்பு இல்லா சூழல் உள்ளது. ரயிலில் சென்ற சிறுபான்மை மாணவர் ஒருவரை ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர். பல பொதுமக்களை எரித்து கொன்று குவித்து வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில்  என்ன நடக்கும் என்ற பதட்டமான நிலை உள்ளது. பொதுவுடைமை கருத்துகளை கூறும் அனைவரையும் தீவிரவாதிகளாக சிறையில் அடைப்பதும், தாக்குதல்களை நடத்துவதையும் பாஜக செய்கிறது.எந்த நிலை வந்தாலும் தமிழகத்தில் பாஜக மலராது. மேலும் பெரியார், அம்பேத்கர் சித்தாந்தம் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

;