tamilnadu

img

3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் எங்கே?

சென்னை:
தமிழகத்தில் பள்ளிகள் திறந்து, 10 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கான புத்தகங்களை இன்னும் அச்சடிக்கும் பணியே முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2018-19ஆம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.அதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன. இதனிடையே 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கும் இந்தக் கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் பாடப்புத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளிகளில் இதுவரை, 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையாகச் சென்று சேரவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

3, 4, 5ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி புதிய பாடத்திட்ட வடிவமானது கடந்த மாதம்தான் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புத்தகம் அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
எனினும் பள்ளிகள் திறந்து இன்றுடன் 15 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விரைவில் பாடப்புத்தங்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் 3, 4, 5ஆம் ஆகிய வகுப்புகளுக்குப் பாடப்புத்தகம் வழங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பிரதியை, மாணவர்கள் நகல்கள் எடுக்கப் பள்ளிகள் கூறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பள்ளிகளுக்குப் புத்தகங்கள் வழங்கப்படாததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பள்ளிகள் திறந்தும் 3, 4, 5ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டுப் பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். செய்யுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

;