tamilnadu

ஜனநாயகத்தை காக்க வாக்களிப்பீர்! வாக்காளர்களுக்கு சிபிஐ வேண்டுகோள்

சென்னை, ஏப்.16-மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:-கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மத்திய பாஜக ஆட்சி, சென்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. கறுப்பு பணத்தை ஒழிப் போம், ஒவ்வொரு வெளிநாடுகளிலிருந்தும் இந்தியப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம், ஆளுக்கு 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம், விவசாயிகளின் விளை பொருட் களுக்கு இரண்டு மடங்கு விலை தருவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்பதெல்லாம் அவர்கள் தந்த வாக்குறுதிகளாகும்.ஆனால், 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக்கி, நம்மிடமிருந்து பணத்தை பறித் தார்கள். நெறிமுறையற்ற ஜிஎஸ்டி வரி போட்டு 6 லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிற்சாலைகளை மூடவைத்தார்கள். அதனால் 6 கோடிபேர், செய்து கொண்டிருந்த வேலையை இழந்தார்கள்.


புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவே இல்லை. விவசாயிகள் கடன்துயரம் தாங்காமல் 60 ஆயிரம் பேர் இந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண் டார்கள். ‘நீட்’ தேர்வை திணித்து சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் கால்வைக்க முடியாமல் தடுத் தார்கள்.அதே சமயத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று சொல்லி கும்பல் கூடி அடித்தே கொல்வது, காஷ்மீரில் கோவிலுக்குள் ளேயே வைத்து பலநாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி ஆஷிபா என்ற சிறுமியை கொன்ற கொடியவர்களை கைது செய்ய விடாமல் தடுத்தது, முஸ்லிம்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குவது, எதிராக கருத்து சொல்லும் எழுத்தாளர்கள் பேராசிரியர்களை சுட்டுக் கொல்வது, கொன்றவர்களைக் கைது செய்யாமல் விட்டு விடுவது, மாற்றுக் கருத்தை எழுதினால் நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று கைது செய்து சிறைவைப்பது, தேசவிரோத வழக்கு போடுவது என நாட்டையே பாஜக அரசு அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அது கூட்டணி அமைப்பதற்குக் கூட, மடியில் கனமிருந்த அதிமுக அமைச்சர்களை ‘ரைடு’ செய்து பணியவைத்ததை நாடறியும்.


தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என விளக்கம் தருவதற்குப் பதிலாக, இந்திய மக்களை மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து மோதவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.தமிழகத்தில் காவிரி நீர், மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள், ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழிச் சாலை, இந்தித் திணிப்பு என எண் ணற்ற பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனுக்கு எதிரான முடிவுகளையே மோடி அரசு எடுத்தது. அதன் தயவில் பிழைத்திருக்கும் அதிமுக அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் ஆகியவையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. எனவே, ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழக வாக்காளர்கள் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு கதிர் அரிவாள், உதயசூரியன் உள்ளிட்ட அவரவர் சின்னங்களில் வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.அன்றைய தினம் நடைபெறும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

;