tamilnadu

img

கல்விக்கொள்கை, காவிரிப் பிரச்சனை, வறட்சி பற்றி விவாதிக்க

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜுன் 11- புதிய கல்விக் கொள்கை - காவிரி பிரச்சனை, வறட்சி குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் தமிழக சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு கூட்டம் செவ்வாயன்று சென்னையில் துவங்கியது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தர ராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக நிகழ்ச்சி நிரலை தேசத்தின் நிகழ்ச்சி நிரலாக மாற்றுவதற்குரிய அனைத்து முயற்சி களையும் கடந்த ஐந்தாண்டு காலமாக மேற்கொண்டு வந்தது. இதனடிப்படையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்புக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  

மத்தியில் மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் தங்களது இந்த செயல் திட்டத்தை மேலும் மூர்க்கமாக செயல்படுத்த மோடி அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பன்முக இந்தியாவின் ஒருமைப்பாட்டையும்பொதுக்கல்வி முறையையும் சீரழிக்கும் பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. அதில் மிகவும் முக்கியமானது மூன்று மொழிகளை படித்தே ஆக வேண்டும் என்பதாகும். இது அப்பட்டமான திணிப்பு என்பதோடு கூட்டாட்சி முறைக்கும் எதிரானதாகும்.  கல்வித்துறையை முற்றாக தனியாரிடம் ஒப்படைக்கவும், அந்நிய உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தங்கு தடை யின்றி அனுமதிக்கவும் வரைவுக் கொள்கை யில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற  வேண்டும் என்ற கோரிக்கை வலு வடைந்து வரும் சூழ்நிலையில், மாநிலங் களது உரிமைகளுக்கு முடிவுகட்டும் விதத்தில் - கல்வித்துறை முழுவதும் மத்திய கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகை யில் பல ஆலோசனைகள் முன்மொழியப் பட்டுள்ளன. 

இந்துத்துவக் கோட்பாடுகளை பாடத்திட்டத்தில் புகுத்தும் ஆபத்தான திட்டங் கள் இவ்வரைவுத் திட்டத்தில் இடம்பெற்று ள்ளன. பாடத்திட்டம், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்தும் தலைகீழ் மாற்றங் களுடன் முன்மொழியப்பட்டுள்ளன.  கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை கள் மீதான கருத்துக்களை தெரிவிப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இது  போதுமானதல்ல. புதிய கல்விக் கொள்கை தொடர்பான குழுவின் ஒட்டுமொத்த அறிக்கை யையும் இந்தியாவின் அனைத்து மொழி களிலும் மொழி பெயர்த்து வெளியிடுவ தோடு, கருத்து தெரிவிப்பதற்கு குறைந்த பட்சம் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கிட வேண்டும். 

காவிரி பிரச்சனை

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை என்று மாநில அரசு கூறியுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.  தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப் படாததால் காவிரி பாசன பகுதி கொஞ்சம், கொஞ்சமாக பாலைவனம் போல மாறி வருகிறது. இதனால் தமிழகத்தின் உணவு உற்பத்தியும் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கர்நாடக அரசிடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி தண்ணீர் பெற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 

கடும் வறட்சி
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழலில் மக்கள் துயரம் அதிகரித்துக் கொண்டுள்ளது.  இந்தப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும், நிலவும் கடுமையான வறட்சி குறித்தும் விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை / தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 

 

;