tamilnadu

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

சென்னை, ஏப்.23- வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்தில் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 25-ஆம் தேதி இந்தியப் பெருங் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.”புயல் சென்னை மற்றும் நாகை இடையே வர வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்த அவர், துல்லியமான விவரத்தை புயல் நெருங்கும்போது தெரிவிப்பதாகக் கூறினார். சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதுவும் புயல் நெருங்கும்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கோடை காலத்தில் புயல் காரணமாக கனமழை நிகழ்வுகள் இதற்கு முன்பும் ஏற்பட்டுள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழக மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசானது முதல், மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

;