tamilnadu

img

அரசுக் கல்லூரிகளில் ஷிப்ட் முறையை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுக...

சென்னை:
அரசுக் கல்லூரிகளில் ஷிப்ட் முறையை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தலைவர்  என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக உயர்கல்வித் துறையின் கீழுள்ள 19 பல்கலைக்கழகங்களின் கீழ் 98 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக் கல்லூரிகளில் 2006-07 ஆம் கல்வி ஆண்டிலிருந்து ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே இருக்கிற கட்டமைப்புகளைப் பயன்படுத்தி கூடுதலான எண்ணிக்கையில் ஏழை, எளிய மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தமிழகத்தில் உயர் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களின் வாய்ப்பு என்பது அதிகரித்தது. 
தற்சமயம் தமிழக உயர் கல்வித்துறை இதனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் குறைந்த கட்டணம், இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை ஆகியவை கல்விக்கான கூடுதல் வாய்ப்பினை வழங்கி வந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கான சமூக நீதி வாய்ப்பு அதிகரித்து வந்தது. தற்சமயம் 98 அரசு கல்லூரிகளில்  நான்கு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழக உயர்கல்வித் துறையின் உத்தரவின் காரணமாக இந்த எண்ணிக்கை பாதியாகக் குறையும். இதனால், ஏழை எளிய மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கான கல்வி கனவையும் சிதைத்துவிடும்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கப் பள்ளிகளிலும் ஷிப்ட் முறையை அமலாக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்தும் நேரத்தில் அரசுக் கல்லூரிகளில் ஷிப்ட் முறையை ரத்து செய்வது எந்த வகையிலும் நியாயமானதல்ல. எனவே ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் இவ்வுத்தரவை திரும்பப்பெறவேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.தொடர்ந்து வரக்கூடிய 2020-21 கல்வி ஆண்டிலும் அரசு கல்லூரிகளில் ஷிப்ட் முறையை அமலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;