tamilnadu

img

ரேசனில் ரூ. 37.70 கோடியில் மளிகை பொருட்கள் விற்பனை

சென்னை:
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் 19 வகை மளிகைப் பொருட்கள் தரமானவை தான் என்றும் இதுவரை ரூ.37.70 கோடி  மளிகை பொருட்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து  அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.மார்ச் 29 ஆம் தேதி முதல் கூடுதலாக நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் தொடர்ந்து வழங் கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு தேவையான 19 வகை மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வெளிச் சந்தையில் இதன் மதிப்பு ரூ. 597 ஆகும். தரமான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் தான் பொதுமக்கள் இதுவரை ரூ.37.70 கோடி மதிப்புள்ள மளிகை பொருட் களைப் பெற்று உள்ளனர்.

விற்காத பொருட்களை விற்பனையாளர்களை பெற்று செல்ல அலுவலர்களே நிர்பந்திக் கிறார்கள் என்பது தவறு. இம்மளிகைப் பொருள்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரேசன் கடைப் பணியாளர்கள் பணியின்போது வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டால் அரசின் நிதியுதவிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து சிதம்பரம் அம்பலத்தாடி மாடத் தெரு கடையின் விற்பனையாளர் ஜெயச்சந்திர ராஜா கூறுகையில், “இந்த கொரானா  ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிவரும் விற்பனையாளர்கள் உயிரை பாதுகாத்து கொள்ள கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணமும் வழங்கவில்லை.

உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவையை செய்து வரும் நியாயவிலை கடை ஊழியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அரிசி கருப்பு நிறத்தில் கெட்டுபோய் கல், மண் கலந்து வருகிறது. ரூ.500 மளிகை தொகுப்பில் வழங்கப்பட்ட பூண்டுகள் கெட்டுபோய் அழுகிய நிலையில் உள்ளது. இதனை பொதுமக்கள் வாங்க மறுக்கிறார்கள். நிர்வாகமோ இதனை திருப்பி வாங்கிக் கொள்ளவும் மறுக்கிறது என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;