tamilnadu

img

விவசாயக்கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குக... தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் கடிதம் 

சென்னை 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிற கொரோனா விஷக்கிருமியின் தாக்குதல் தமிழ்நாட்டிலும் அனைத்து வகையிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தாங்கள் 23.3.2020 அன்று விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளீர்கள். அன்றிருந்ததைவிட இன்று நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அனைத்து விபரங்களும் தங்கள் கையில் இருப்பதினால் அந்த விபரங்களுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. இருக்கும் மோசமான நிலைமையை அரசும் மக்களும் ஒருங்கிணைந்துதான் சந்திக்க வேண்டும். இன்றைய கடுமையான நிலைமையை மாற்றி புதிய நிலைமையை உருவாக்கிட வேண்டும். சகஜநிலைமையை கொண்டு வருவதில் அரசுடன் எங்கள் மாநில சங்கமும் மாநில நிர்வாகிகளும் உங்களோடு இணைந்து செயல்படுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மார்ச் 23 ஆம் தேதிய தங்களது அறிவிப்பில், மார்ச் 31 வரை 144 தடையுத்தரவு பிறப்பித்து,இக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சம்பந்தமாகவும் பொருளாதார நஷ்டங்கள் ஏற்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தீர்கள். தமிழ்நாட்டில் அதிகபட்சமான உழைப்பாளிகள் விவசாயக்கூலித்தொழிலாளர்கள்தான். அவர்கள் வைத்துள்ள ரேசன்கார்டுகளுக்கு குடும்பத்திற்கு ரூ.1000 வழங்குவது என்ற அறிவிப்பை தவிர்த்து வேறு எந்த உதவியும் இல்லை. கூலித்தொழிலாளர்களுக்கு இரண்டுநாள் சம்பளம் தரப்படும்.அதுவும் மார்ச் மாதம் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மார்ச் மாதம் மொத்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் என்றால் அதில் 5 லட்சம் பேருக்குக்கூட வேலை வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் தாங்கள் அறிவித்த இரண்டு நாள் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எங்கள் சங்கம் இதுகுறித்து கூலித்தொழிலாளிகளுக்கு போதுமான உதவி இல்லை; அதில் நியாயமும் இல்லை என்ற கருத்தை நாங்கள் பதிவு செய்திருந்தோம்.

இப்போது ஊரடங்கும் தனித்திருப்பதும் என்ற அவசர நிலை ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீடிக்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழ்நாட்டிலும் நீடிக்கும் என்று தாங்களும் அறிவித்துள்ளீர்கள். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடையோ, அவசரநிலையோ,நெருக்கடி நிலையோ, ஏதோ ஒன்று தொடரும் என்று அறிவிப்புகள் உள்ளன. அப்படியென்றால் மக்களின் நடமாட்டம் முற்றாக கட்டுப்படுத்தப்படுகிறது. விஞ்ஞானப்பூர்வமாக நோய்கள் பரவாமல் தடுக்க இந்தக் கட்டுப்பாடுகள் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.  ஆனால் கட்டுப்பாட்டிற்குள் நிறுத்தப்பட்டிருப்பது,மரங்களோ,பாறைகளோ அல்ல,மனித ஜீவன்கள். எனவே இவர்கள் உயிருடன் இருப்பதற்கு அடிப்படை தேவைகள், குறிப்பாக உணவு என்பது மிகமிக அவசியம். இதை ஏனோதானோவென்று அரசு அறிவிப்பதும் கொடுப்பதும் பொருத்தமற்றது.

எனவே உயிர்வாழ்வதற்கான உணவை உத்தரவாதப்படுத்திடும் விதத்தில் அரசின் நிவாரணம் இருந்திட வேண்டும். அது தங்கள் அறிவிப்பில் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்.
இரண்டாவது அறிவிப்பில், எந்த நிவாரணங்களும் இவர்களுக்கு இல்லை. எனவே இந்த மக்களுக்கு  உயிர்வாழ்வதற்கான நிவாரணம் கிடைத்திட கீழ்க்கண்ட எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, அதை நடைமுறைப்படுத்துவதுதான் அந்த மக்களை பாதுகாத்திடும் என்று நாங்கள் கருதுகிறோம். 

1. மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு 21 நாட்கள் நீடிக்கிறது. அந்த 21 நாட்களையும் அரசு வேலை தரும் நாட்களாக அறிவித்து, அந்த நாட்களுக்கு சட்டக்கூலியை அளித்திட வேண்டும்.மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு , சட்டக்கூலி ரூ.229 (பழைய சட்டக்கூலி) அடிப்படையில் 1832 ரூபாயும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு சட்டக்கூலி ரூ. 256 அடிப்படையில் ரூ.3584 என ஆக மொத்தம் ஒரு தொழிலாளிக்கு ரூ.5416 வழங்கிட வேண்டும். இது வேலை அட்டை உள்ள  அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.அல்லது ஒரு விவசாயத்தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்ற  அடிப்படையில் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

2.மலைப்பிரதேசங்களில் வாழுகிற ஆதிவாசி மக்கள் அல்லது வனாந்திர பகுதிகளில் வாழுகிற மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக உணவை சமைத்து வழங்கிட வேண்டும்.

3.ஊரடங்கு நிலை முடிவுக்கு வந்தவுடன் அரசு அறிவித்த 150 நாள் வேலையை (கொரோனா  திட்ட சிறப்பு அறிவிப்பு) தொடர்ச்சியாக சட்டக்கூலியுடன் வழங்கிட வேண்டும்.

4.அரசு அறிவித்துள்ள இலவச அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் இரண்டாவது தவணையாக இலவசமாக வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

;