tamilnadu

img

நாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும்....  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

இந்திய பிரதமர் எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு இன்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு தொடரும் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். அவ்வாறு தொடருமேயானால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் பேரிடர்கால நிவாரணமாக  வழங்க வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

முழுஅடைப்பு தொடர வேண்டுமென பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், 11ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசிய பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். முழு அடைப்பு தொடர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவரது அறிவிப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு தேவைப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும். 

அதே நேரத்தில் இந்த முழு அடைப்பின் காரணமாக பட்டினிச்சாவுகள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய , மாநில அரசுகளின் பொறுப்பாகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம், மக்களுக்குப்  பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10000/-  ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தப் பேரிடரை எதிர்கொள்வதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். இது அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டியிருப்பது ஏனென்று விளங்கவில்லை. தற்போது கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு 510 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழும் கேரளாவுக்கு மிக மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.அதே நேரத்தில் மகராஷ்டிராவுக்கு 1611 கோடியும்; உத்தரப் பிரதேசத்துக்கு 966 கோடியும்; மத்திய பிரதேசத்திற்கு 910 கோடியும்; பீகாருக்கு 708 கோடியும்; ஒடிசாவுக்கு 802 கோடியும்; ராஜஸ்தானுக்கு 740.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணுகுமுறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

கொரோனா பிரச்சனை காரணமாக புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா மூலமும், எக்சைஸ் வரிவசூல் மூலமும் கிடைக்கக்கூடிய தொகை முற்றிலுமாக நின்று போய்விட்டது. இந்நிலையில், சிறிய மாநிலமான புதுச்சேரி தற்போது வருவாய் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருப்பது அது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. மத்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. 

நிதிப் பற்றாக்குறையால் அம்மாநிலத்தில் வாழும் மக்கள் கொரோனாவுக்குப் பலியாகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே புதுச்சேரி அரசுக்கு உடனடியாக உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும் எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் நீண்டகாலமாக கொடுக்கப்படாமல் இருக்கும் ஜிஎஸ்டி வரி பாக்கியையும் உடனடியாக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
 

;