tamilnadu

img

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஜன.8-ல் கிராமப்புற முழு அடைப்பு

சென்னை:
நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 அன்று கிராமப்புற முழு அடைப்பு நடத்திடவேண்டும் என்று அகில இந்திய அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ. அமிர்த லிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 அன்று கிராமப்புற முழு அடைப்பு நடத்திட அகில இந்திய அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.மத்திய பாஜக அரசு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. விவசாயத்தொழிலாளர்கள் வேலையின்றி அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அவலம் தொடர்கிறது. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இரண்டு அமைப்புகளின் சார்பில் ஜனவரி  8 அன்று சுமார் 500 இடங்களில் சாலை மறியல், மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 250 நாட்கள் வேலை 600 ரூபாய் கூலி என உயர்த்திட வேண்டும். 60 வயதான விவசாயிகள், விவசாய தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் வழங்கவேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும். விவசாயிகளை கடனி லிருந்து விடுவிக்கும் வகையில் ஒரு முறை அனைத்து வகை கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகள் பெறும் நகை கடனுக்கான வட்டி மானியத்தை ரத்து செய்தும், வட்டிதொகையை உயர்த்தியும் அறிவித்துள்ளதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடளுமன்ற சிறப்புகூட்டத்தை நடத்திட வேண்டும். குடியுரிமைதிருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். வனஉரிமைச்சட்டம் 2006-ஐ தீவிர மாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் உயிர் நாடியான மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள சாலை மறியல், மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கலந்து கொண்டு அகில இந்திய போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;