tamilnadu

img

இ. முத்துக்குமார் சிறையில் அடைப்பு: சிபிஎம் கண்டனம்

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


திருப்பெரும்புதூரை அடுத்த மண்ணூரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சோவல் தொழிற்சாலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சோவல் தொழிற்சாலையில் உதிரிபாகம் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களை ஹவாசின் என்ற நிறுவனம் வழங்கி வந்தது. ஹவாசின் நிறு வனத்திற்கு ரூ. 30 கோடி பணம் வழங்க வேண்டியிருந்ததால், சோவல் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை ஹவாசின் நிறுவனம் எடுத்துச் செல்ல முயன்ற போது அங்கு பணிபுரிந்த தொழி லாளர்களும், அவர்களுக்கு ஆதர வாக சிஐடியு தலைவர்களும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 


போராட்டம் நடத்திய தொழிலாளர்களையும், சிஐடியு தலைவர்கள் எஸ். கண்ணன், இ.முத்துக் குமார் ஆகியோரையும் கைது செய்து அடைத்து வைத்து விட்டு, அதன் பிறகு தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் மூலம் அப்புறப்படுத்தி விட்டனர். பிறகு இ.முத்துக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய ஜனநாயகவிரோத, அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 


இயந்திரங்களை திரும்பப் பெறுகிற இதுபோன்ற விசயங்களில் நீதிமன்றம் தலையீடு செய்கிற போது கொடுக்கல் வாங்கல் விவகாரமாக மட்டும் பார்க்காமல்,அங்கு பணிபுரியும் தொழிலாளர் களுடைய வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு, சமூகப் பார்வையுடன் அணுக வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு கொரிய நாட்டு நிறுவனமான டாங்சன் மூடப்பட்டு 15 மாதங் களாகிறது. அங்கு வேலை செய்த113 தொழிலாளர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்ற னர். இதேபோன்ற அவலம் சோவல் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தொழிலாளர்கள் எதிர்த்து போராடியுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு கார் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த தொழிற்சாலை களில் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி, சட்டக் கூலி - பாதுகாப்பு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என அனைத்து உரிமை களும் மறுக்கப்படுகின்றன. தொழி லாளர்கள் கொத்தடிமைகளாக பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளை திடீரென மூடுவதும், வேலையிழந்த தொழி லாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் நடுத்தெருவில் நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டியும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைக் கூட கட்டாமல் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளை மூடிவிட்டு இவற்றின் நிர்வாகங்கள் தப்பி ஓடிவிட்டன. இந்நிறுவனங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்போதும் வேலையின்றி தவித்து, அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. 


தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறை ஆணையமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவது வேதனையாக உள்ளது.எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட இ.முத்துக்குமாரை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டு மென்றும், அவர் மீதும், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும் புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.


மேலும் சோவல் தொழிற்சா லையில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹவாசின் நிறுவனம் எடுத்துச் சென்ற இயந்திரங்களை மீண்டும் தொழிற்சாலைக்குள் பொருத்தி தொழிலாளர்களுக்கு பணி வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொழிலாளர்களே தரமான உற்பத்தியை உருவாக்கித் தர தயாராக இருப்பதால் தமிழக அரசும், தொழிலாளர் துறை ஆணையரும் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;