tamilnadu

img

எரிவாயு எடுப்பதற்கு மக்கள் கருத்தை கேட்கத் தேவையில்லை என்பதா? மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து போராட விவசாயிகள் சங்கம் அழைப்பு

சென்னை:
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு  பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவை கண்டித்து  போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சகம், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்து ஜனவரி 16 ஆம் தேதி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு சுற்றுச்சூழல் முன்அனுமதி பெற வேண்டியதில்லை என்றும், பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வேளாண் விளைநிலங்களை பாழ்படுத்துவது, கடல் வளத்தை அழிப்பது, மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுவது குறித்து எவ்வித பொறுப்புணர்வுமின்றி மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக, பொதுமக்களின் நலன்களை காவு கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே மத்திய அரசு, மக்கள் நலன்களுக்கு விரோதமான இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 

ஹைட்ரோ கார்பன் பிரச்சனை தொடர்பாக 2019 ஜுலை 3 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எங்கும் அனுமதிக்கமாட்டோம் என்றும் இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றும் அது மட்டுமல்லாமல் இது தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்றும் உறுதியளித்தார். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம், தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழியிலிருந்து தமிழக அரசு தன்னை மாற்றிக் கொண்டு விட்டது என்பதையே முதலமைச்சரின் கடிதம் வெளிப்படுத்துகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அத்துடன், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதுடன், தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் . மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;