tamilnadu

img

மக்களோடு நேரடித் தொடர்பு கொண்ட மூன்றாவது அரசாங்கமே உள்ளாட்சி.... குழப்பம், குளறுபடிகள் நீக்கி டிசம்பரிலேயே தேர்தல் நடத்துக: ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை:
கூடுதல் அதிகாரங்களும் போதுமான நிதி ஆதாரங்களும் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளாக தமிழக உள்ளாட்சி மன்றங்கள் உருவாகவேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும்,மத்திய-மாநில அரசுகளுக்கு அடுத்து  மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட ஒரு மூன்றாவது அரசாங்கமாக உள்ளாட்சி மன்றங்களே செயல்பட முடியும்; அதற்கேற்ற வகையில் அவற்றுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. தோல்வி பயம் காரணமாக, வேண்டா வெறுப்பாக இத்தேர்தலை அறிவித்துள்ள அதிமுக அரசு, நீதிமன்றம் தலையிட்டு தடுத்துநிறுத்தும் என்ற எண்ணத்தோடு, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அறி விப்பை வெளியிடாமல் தவிர்த்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 5 வியாழனன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
இந்நிலையில், தமிழக அரசு குழப்பங்களையும் குளறுபடிகளையும் சரிசெய்து, முழு அளவிலான தேர்தல் அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், உள்ளாட்சி மன்றங்கள் முழுமையான அதிகாரம் அளிக்கப்பட்டவையாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்காக ஓர் ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகத்தில் ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தவரை அவை அனைத்தும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன; ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் அப்படி ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை என சுட்டிக்காட்டி னார்.“தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920- ன் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியானது, சென்னை மாநகராட்சிசட்டம் 1919-ன் கீழும், இதர மாநகராட்சிகள் தனித்தனி சட்டங்களின் கீழும் செயல்படுகின்றன. இந்த சட்டங்களுக்குள், நகர் பாலிகா சட்டத்தின்படி இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிகள் இணைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற உள்ளாட்சி மன்றங்களைப் போல் அல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தின் கீழ் இன்னும் கொண்டு வரப்படாமல் இருக்கின்றன” என்று  ஜி.ராமகிருஷ்ணன் விவரித்தார்.மேலும், உள்ளாட்சி மன்றங்களுக்கு மாநிலஅரசின் வருமானத்திலிருந்து அளிக்கப்படும் பங்கு கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.“மிக நீண்ட ஆண்டுகளாக, உள்ளாட்சி மன்றங்களுக்கான மேற்குறிப்பிட்ட வருவாய் இனம் என்பது 8 சதவீதத்திலிருந்து வெறும் 10 சதவீதம் என்ற அளவிற்கு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரளா, உள்ளாட்சி மன்றங்களுக்கான பங்கினை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உள்ளாட்சி மன்றங்கள் தான் மக்களோடு மிக நெருக்கமாக செயலாற்றுகின்றன.  இவற்றின் நிதி பலம் அதிகரிக்கப்பட்டால்தான், மக்களின் வாழ்வாதாரங்களும் வாழ்நிலையும் பெரிய அளவிற்கு முன்னேற்றம் காண முடியும்” என்றும் அவர் கூறினார்.தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துவது ஏற்கனவே மூன்றாண்டு காலம் தாமதிக்கப்பட்டுள்ளது; டிசம்பர் மாதத்தில் எப்படியேனும் முழுமையான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய ஜி.ராமகிருஷ்ணன், தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் நிதியும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்னிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். 
-

;