tamilnadu

img

கொரோனா பரவல் தடுப்பு....ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய  தேவைகளை உடனே பூர்த்தி செய்க!

சென்னை:
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு   வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலை தடுப்பதற்காக 144 ஊரடங்கு சட்டத்தின் மூலம் மக்களை வீட்டிலேயே தங்க வைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. இதனை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது.
அன்றாடம் சம்பாதித்து பிழைப்பு நடத்தக்கூடிய மக்கள் 80 கோடி பேர்கள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதே சராசரி தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினந்தோறும் சம்பாதித்து தன்னுடைய உணவு உட்பட தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாமல் அவர்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டும் என்று விரும்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துப்பகுதி மக்களும் இதில் அடங்குவர். தெருவோர வியாபாரம் செய்பவர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள், கடை சிப்பந்தி, கட்டுமானத் தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்கள், மெக்கானிக்குகள், மீனவர்கள் என பலர் அடங்குவர்.  

இவர்களின் கையில் எந்த பெரிய சேமிப்பும் இருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே இவர்களுக்கான அடிப்படைத் தேவைக்காக அக்குடும்பங்களுக்கு உணவுக்கான பொருட்களை (அரிசி, பலசரக்கு போன்றவைகள்) கேரளா உட்பட மாநிலங்களில் வழங்குவதைப் போல அவர்கள் வீடு தேடி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு, பால், காய்கறி, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.

தன்னார்வலர்களை பயன்படுத்துக 
எனவே அரசு அறிவிக்கின்ற உதவிகளை உடனடியாக மக்களை நேரில் சென்று வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தயாராக உள்ள எங்கள் அமைப்பு போன்ற சமூகத்தில் மக்கள் மத்தியில் செயல்படும் தன்னார்வலர்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். 

மேற்கண்ட வகையில் ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;