tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளை கபளீகரம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை:
கூட்டுறவு வங்கிகளை கபளீகரம்செய்யும் மத்திய அரசின் நடவ டிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக திகழ வேண்டுமென்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தில் 97வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக நகர கூட்டுறவு வங்கிகளை அவசர சட்டம் மூலம் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்தியஅரசு. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

கூட்டுறவு, மாநில அரசின் கீழ் உள்ள துறையாகும். மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே மாநில அரசின் உரிமைகளையும் அதிகாரத்தையும் பறித்துள்ளது மத்திய அரசு. இது கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரானதாகும்.நாடு முழுவதும் உள்ள 1482 நகர கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறோம் எனவும், இதனால் கூட்டுறவுவங்கியில் நடைபெறும் முறைகேடுகளை களையவும், வைப்பீட்டா ளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே அவசர சட்டம்கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுத்தான் செயல்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையும், ஆய்வும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏதோ இப்போதுதான் நகர கூட்டுறவு வங்கிகளின் கண்காணிப்பை தீவிரப் படுத்த உள்ளோம் என்பதெல்லாம் வெளி உலகிற்கு மட்டுமே.

மத்திய அரசின் கைப்பாவையாக ரிசர்வ் வங்கி
நகர வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்புத் தொகை ரூபாய் 4.85 இலட்சம் கோடி இருப்பில் உள்ளது தான் மத்திய அரசின் கண்ணை உறுத்து கிறது. எனவேதான் கூட்டுறவு வங்கிகளை அவசரச் சட்டம் போட்டு கையகப்படுத்துகிறது மத்திய அரசு. கூட்டுறவு வங்கிகளின் மீதான நம்பகத்தன்மை இதனால் உறுதிப்படுத்தப்படும் என்கிறது மத்திய அரசு. அவ்வாறெனில் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், தனியார் வங்கிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், ஊழல்கள், பெரும் தொகையாக உள்ள வராக்கடன் இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு. எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் மூன்றுஆண்டுகளாக இருந்தது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவுவங்கி ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் தான் இருந்தது. ஹர்ஷத் மேத்தா ஊழல் முதல் தற்போது பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வரை தீர்வு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கி தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இல்லைஎன்பதையும், மத்திய அரசின் கைப்பாவையாக தான் செயல் படுகிறது என்பதையும் அனைவரும் அறிவர்.

எனவே, இந்த அவசர சட்டத்தினால்;

*    வட்டி சீரமைப்பு என்ற பெயரில் வைப்பீட்டாளர்களின் வட்டிவிகிதம் குறைக்கப்படும். 

*    வைப்பீட்டாளர்கள் தங்களது வைப்பீட்டுத் தொகை குறித்து வருமானவரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் மற்றும் வருமானவரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 

*    ரிசர்வ் வங்கி கண்காணிப்பு என்ற பெயரில் மேலாண்மை நிர்வாகிகளை பணியமர்த்தக் கூடும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் அதிகாரம் பறிக்கப்படும்.

*    நிர்வாக காரணங்களை முன்னிறுத்தி வங்கிகளின் இணைப்பு, வங்கிகள் கலைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். 

*    ஆளும் கட்சி அரசியல் பின்னணியில் இவ்வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகள் முத்ரா கடன், பண்ணை சாரா கடன் என மடைமாற்றம் செய்யக் கூடும்.

*    ஆளும் கட்சிகள் தங்களது பலத்தை விரிவாக்கம் செய்து கொள்வதற்கும், ஒற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பயன்படுமே ஒழிய, கூட்டுறவு நிறுவனங்கள் மக்களுக்கான அமைப்பாக செயல்படுவது முடக்கப்பட்டு விடும்.

இது ஏதோ நகரகூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமல்ல எதிர் காலத்தில் அனைத்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு மத்திய அரசு முன்னெடுக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம். மக்களுக்கான கூட்டுறவு அமைப்புக்களை கபளீகரம் செய்யும் இத்தகைய போக்குகளை கைவிடவேண்டுமெனவும், மாநில அரசுகளின் உரிமைகளையும், அதிகாரங்களையும் பறிக்கும்நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.மத்திய அரசின் இந்த நடவ டிக்கைகளுக்கு எதிராக கூட்டுறவு வங்கி வைப்பீட்டாளர்களும், உறுப்பினர்களும் பொதுமக்களுக்கும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;