tamilnadu

img

இந்துத்துவா சக்திகளை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டம்

சென்னை:
இந்துத்துவா சக்திகளை எதிர்த்து அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் செவ்வாயன்று (நவ.19)சென்னையில் நடைபெற்றது.  இதனையொட்டி செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

3 ஆண்டுகளாக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைதள்ளிப்போட்டு வந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு டிச.13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு பதில் சொல்லவேண்டும்
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. கல்வி வளாகங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த 9ஆம் தேதி தற்கொலை நடந்துள்ள நிலையில், இதுநாள் வரை உருப்படியான விசாரணை நடத்தவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். பாத்திமா லத்தீப் தற்கொலையையொட்டி எழும் கேள்விகளுக்கு தமிழகஅரசு பதில் சொல்ல வேண்டும். உரிய விசாரணை நடத்தி, காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.தமிழகத்தில் வீட்டுமனைப் பட்டா பெரும்பிரச்சனையாக உள்ளது. கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைஎதிர்த்து இந்துமுன்னணி அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. எனவே, வருகிற26, 27 தேதிகளில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இயக்கம் நடத்த உள்ளோம். இந்துத்துவா சக்திகள் கட்டுப்பாடின்றி  தானடித்த மூப்பாக பல காரியங்களை செய்கின்றன. திருவள்ளுவரையே கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அவரை பிஜேபி-யில் சேர்க்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவாசக்திகளை எதிர்த்து அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவதுகுறித்தும் மாநிலக்குழுவில் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதன்பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், பாலகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:

ரஜினி-கமல் ஒன்று சேர்ந்து வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறதே?
கமல்ஹாசனும், ரஜினியும் ஒரே அணியாகஇணைந்து அரசியல் செய்ய முடியுமா? இணைந்து செயல்பட முடியுமா? இருவரதுஅரசியலும், அணுகுமுறையும் வெவ்வேறானது. எந்த அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படுவார்கள்? சினிமாவில் இருந்து சிலபேர் வந்து கட்சி தொடங்கியவுடன் அவர்கள் பின்னால் திரண்டு செல்கிற அளவுக்கு தமிழக மக்கள் குறைவான அரசியல் அறிவு கொண்டவர்கள் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி போன்றவர்கள் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்றுதான் கூறினார்கள். அதையெல்லாம் மீறித்தான் மக்கள் வாக்களித்தார்கள். எனவே, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்துதான் மக்கள் வாக்களிக்க வாய்ப்பு அதிகம். திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இடையில் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் வெற்றியை பாதிக்க செய்ய முடியாது.

உள்ளாட்சி தேர்தலில் சிபிஎம் நிலைபாடு என்ன?
உள்ளாட்சி நிர்வாகத்திலும் அதிமுக-பாஜககூட்டணி முறியடிக்க வேண்டும் என்பதுதான் சிபிஎம் நிலைபாடு. எனவே, அதை முறியடிக்க திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்.சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. சிபிஎம் நிலை என்ன?மேயர் இடங்களை பொறுத்தவரை அதிமுகரகசியமாக வைத்துள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் இடஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும். சென்னை அல்லது ஏதாவது ஒரு மாநகராட்சியை தலித்துகளுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். மாநகராட்சி மேயர் பதவிகளில் தலித், பெண்கள்உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.எடப்பாடி முதலமைச்சரானதும் அதிசயம்,அவர் ஆட்சியில் நீடிப்பதும் அதிசயம், அதுபோன்று இன்னொரு அதிசயம் நிகழப்போகிறது என்று ரஜினி கூறியிருக்கிறாரே?ரஜினி பேசுவதற்கெல்லாம் விளக்கவுரை சொல்வது என்னுடைய வேலையல்ல. ரஜினி சொன்னதற்கு முதலமைச்சர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

;