tamilnadu

img

சிறுவியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை,ஏப்.3  கொரானா வைரஸ் தொற்றால் வியாபாரம் செய்யமுடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிறுவியாபாரிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என சென்னை நகர சிறுவியாபாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

சென்னை நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுகடை வியாபாரிகள் தலைமுறை தலைமுறையாக வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். குறிப்பாக என்எஸ்சி போஸ் சாலை , ரட்டன் பஜார்சாலை, பிரேசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங்பஜார், வடக்கு கோட்டைசாலை, முத்துசாமி சாலை, பூக்கடை பேருந்து நிலையம் உள்பகுதி, பர்மாபஜார், மூர் மார்க்கெட், ரிச்சித் தெரு ரேடியோ மார்கெட், தி நகர், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், மாம்பலம், கே.கே.நகர், வடபழனி, போரூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சிறுவியாபாரிகள் சுயவேலைவாய்ப்பு அடிப்படையில் சமூகத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

சிறிய வகை ஆயத்தஆடைகள், துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் , மின்சாதனப்பொருட்கள், தேநீர் கடைகள், உணவு கடைகள் விற்பனை செய்பவர்கள் தற்போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகிவிட்டனர். இதுபோன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்,சேலம், திருநெல்வேலி போன்ற நகரங்களில் சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அரசு வேண்டுகோளின் படி சிறுகடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. 21 நாட்களுக்கு யாரும் தொழில் செய்யமுடியாது இதனால் இந்த தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ 2000 நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது தான் ஆனால்  இது போதாது. அன்றாடம் காய்ச்சியான இம்மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு தமிழக முதலமைச்சரை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. சாலையோர சிறுகடை வியாபாரிகள் குடும்பத்திற்கு ரூ 10ஆயிரம் வழங்க வேண்டும், இதை உள்துறையும் , தமிழக முதல்வரும் பரிசீலனை செய்து மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் உரியவர்களின் வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்தவேண்டும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.அபுதாகீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

;