tamilnadu

img

அசோக், அன்சாரி படுகொலையை கண்டித்து நாடுதழுவிய இயக்கம்

சென்னை:
திருநெல்வேலியில் சாதி ஆதிக்க சக்திகளால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஜார்க்கண்ட் மாநிலத்தில்  மதவெறியர்களால் தப்ராஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் வரும் 12 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது.சென்னையில் ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலை வர் பி.ஏ.முகமது ரியாஸ், பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசுப்பணியில் உள்ள நேர்மை யான அதிகாரிகளை மத்திய பாஜகஅரசு வேட்டையாடுவதை கண்டித்தும்அவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரியும் ஜூலை 21 ஆம் தேதி  மும்பையில்  தேசிய கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு குஜராத்தில் மோடிக்கு அடிபணியாத நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்து தற்போது அம்மாநில அரசால் பழிவாங்கப் பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் பட்டிற்கு தார்மீக ரீதியில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது மனைவி ஸ்வேதா பட்டை சந்தித்தது. இந்த கருத்தரங்கில் குஜராத்தில் பாஜக அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர் களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அசாமில் கருத்தரங்கம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) எதிர்த்து அசாம் தலைநகர் குவஹாத்தியில் இம்மாத இறுதியில் தேசிய கருத்தரங்கம் நடத்தவும், நமது அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையை  பாதுகாக்கவேண்டியதன்  அவசியத்தை வரும் சுதந்திரநாளில் நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு நாளாக அன்றைய நாளை  அனுசரிக்கவும் மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று தேசிய அளவில் வேலைவாய்ப்பு கோரி இயக்கம் நடத்தவும், சர்வதேச அளவில் ஏகாதியபத்தியத்திற்கு ஏதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம்  இடதுசாரி இளைஞர் அமைப்புகளின் சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை நடத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பேட்டியின்போது இணை செயலாளர்  பிரீத்திசேகர், தமிழ்நாடு மாநிலத்தலைவர் ரெஜீஸ்குமார், மாநிலச்செ யலாளர் பாலா, மாநில பொருளாளர் தீபா ஆகியோர் உடனிருந்தனர்.

;