tamilnadu

img

கார்ப்பரேட்களுக்கு எதிராகப் போராடியவர்... தோழர் பாக்கியராஜ் தலைவர்கள் புகழஞ்சலி

சிவகாசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் திகழ்ந்த செல்வம் ஊறுகாய் கம்பெனி நிறுவனர் தோழர் பி.பாக்கியராஜ் வெள்ளியன்று காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். தோழர் பி.பாக்கியராஜின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், பெ.சண்முகம், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.மகாலட்சுமி, எஸ்.பி.ராஜேந்திரன், உட்படபல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கே.பாலகிருஷ்ணன்,ஜி.இராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., இரங்கல்தோழர் பாக்கியராஜ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள்டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, மதுரைமாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இரங்கல் கூட்டம் 
தோழர் பி.பாக்கியராஜின் உடல் அவரதுஇல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பேசுகையில்:- சாதாரண அச்சுத் தொழிலாளியாக பணியாற்றியவர் தோழர் பி.பாக்கியராஜ். அவருடன் தோழர்கள் ஜே.லாசர், பால்ராஜா, திலகராஜ் ஆகியோரும் வேலை செய்துள்ளனர். பின்பு தொண்டர் துரைச்சாமியுடன் இணைந்துஅனைவரும் அச்சுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார். பின்னர் பாக்கியராஜ், சிறிய அளவில் ஊறுகாய் நிறுவனத்தை துவங்கி, தனது கடினமான உழைப்பால் பெரிய கம்பெனியாக உயர்த்தி அதை நிலை நிறுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட ஊறுகாய் கம்பெனிகளை ஒருங்கிணைத்து அதை சங்கமாக்கி, அச்சங்கத்தை இடதுசாரி இயக்கங்களோடு இணைந்து செயல்படவைத்தவர். கார்ப்பரேட் நிறுவனத்தினர் செல்வம் ஊறுகாய் கம்பெனியை விலைக்குக் கேட்ட போது, தர முடியாது. எனக்குப் பின்னால் எனது பிள்ளைகள் நடத்துவார்கள் என உறுதியான நிலை எடுத்தவர். 

வணிகத்தின் மூலம் ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார். தீக்கதிர், செம்மலருக்கு விளம்பரங்கள் தந்து உதவியவர். பேரிடர் காலங்களில் தாமாக முன் வந்து உதவி செய்த பண்பாளர்.கட்சித் தோழர்களுடன் வீடு, வீடாகச் சென்றுகட்சிக்கு நிதி திரட்டியவர். அவரது சொந்தவாழ்க்கையிலும், இயக்க வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். செங்கொடியின் அடையாளத்தை இறுதிவரை உயர்த்திப்பிடித்தவர் என புகழாரம் சூட்டினார்.

;