tamilnadu

img

ஊழல், முறைகேடுகளுக்கு துணைபோவதா? சிவகங்கை மாவட்ட ஆட்சியரை மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்

சிவகங்கை:
ஆளும் கட்சியினரும், மாவட்ட ஆட்சியரும் கூட்டாகச் செயல்பட்டு சிவகங்கை மாவட்டத்தை சீரழித்துவருகின்றனர். ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் துணைபோகிறார். அவரை உடனடியாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 28-அன்று 50 ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழுக்கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் வீரபாண்டி கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் மணல் குவாரிநடத்தி ஊழல் புரிந்துவருகிற ஆளும் கட்சியினரோடு மாவட்ட ஆட்சியரும் கைகோர்த்து செயல்பட்டுவருகிறார். இதன் காரணமாக மாவட்டத்தின் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மணல்குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகிறார்கள். ஆளும் கட்சியும்,மாவட்ட ஆட்சியரும் கூட்டாகச் செயல்பட்டுசிவகங்கை மாவட்டத்தை சீரழித்துவருகிறார்கள். மணல் அள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின்மூலமாக செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டு ஆளும் கட்சியினரின் பைகளை நிரப்பும் திட்டமாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இவற்றுக் கெல்லாம் காரணமான ஆளும் அதிமுக அரசைக்கண்டித்தும், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகிற மாவட்ட ஆட்சியரை மாவட்டத்திலிருந்து மாறுதல் செய்யவலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் 50 மையங்களில் வருகிற ஜூலை 28-ஆம் தேதிஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;