tamilnadu

img

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தவர் கைது - தமிழக அரசு அராஜகம்


சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தவர் மீது வழக்கு பதிவு செய்து உக்கடம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை 21 ஆண்டுகாலத்திற்கு சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியுள்ளது தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் அவசரஅவசரமாக சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன என்று ஆளும்கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கண்டித்து இயக்கங்களை நடத்தி வருகிறது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு சந்தேகங்களை தொடரந்து எழுப்பி வருகின்றனர். இதன்காரணமாக கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமை பறிபோகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கோவை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டும் அதிகாரிகள் தெளிவுபடுத்த மறுக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி ஆணையர் சரவன்குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்திக்கையில் இதுகுறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியபோதும், விரிவான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடும் செய்கிறோம் என நழுவிச்சென்றார்.

நாளுக்குநாள் இவ்விகாரம் பூதகரமாக எழுந்துவருகின்ற நிலையில் இதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக கைது உள்ளிட்ட நடவடிக்கையின் மூலம் அச்சுறுத்தல் நடவடிக்கையை துவங்கியுள்ளது. இதன்ஒருபகுதியாக சூயஸ் திட்ட ஒருங்கினைப்பாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு உக்கடம் காவல்நிலையத்தில் சூயஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு தங்களின் விசுவாசத்தை காட்டும் விதமாக காவல்துறையும் அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

 அதன் ஒரு பகுதியாக உக்கடம் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் தனது முகநூலில் சூயஸ் திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில் கோவை குடிநீர் விநியோகம் தனியார் மையமாக்கப்பட்டு விட்டது. குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு தரை வார்க்கப்பட்டுள்ளது. சிறுவாணி  மற்றும் பில்லூர் அணைகள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. சூயஸ் நிறுவனம் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்க இயலாது என்று தனது முகநூலில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது இந்த கருத்து அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக கூறி உக்கடம் காவல் துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
ஆனால் இதுநாள் வரை சூயஸ் நிறுவனமோ, மாநகராட்சியோ 24 மணிநேரமும் எந்த அடிப்படையில் குடிநீர் வழங்கும். நாள் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு குடிநீர் வழங்கும். அதற்கான நீர் ஆதாரம் இருக்கிறதா? அதற்கான கட்டணம் என்ன? என்பது குறித்து தெளிவாக pகூறவில்லை.  மேலும் 24 மணிநேரமும் தண்ணீர் கொடுப்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லாத நிலையில் தொடர்ந்து சூயஸ் நிறுவனம் மக்களிடம் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக காவல் துறை சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக கேள்வி எழுப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

;