tamilnadu

img

தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையில் எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரம்கால் மண்டபத்தில் பட்டாசு ஆலை அதிபர் வீட்டு திருமணம் நடந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முறைகேடுகளை தவிர்க்க அரசு தனி சட்டமியற்றி கோயில் நிர்வாகத்தை கையில் எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் ஆடம்பர முறையில் பட்டாசு தொழில் அதிபர் வீட்டுத் திருமணம் நடந்துள்ளது. பொதுவாக ஆயிரம்கால் மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது விழாக்களை நடத்தவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோயில் மரபுகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியை சேர்ந்த ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலை அதிபர் ராஜரத்தினம் -பத்மா தம்பதியர் மகளான சிவகாமி , மற்றும் சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர் மகன் சித்தார்த்தன் ஆகியோரின் திருமணம் மிகவும் ஆடம்பரத்துடன் நடைபெற்றுள்ளது.
பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்காரங்கள் போல ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மற்றும் உள்பகுதி ஆகியவை வண்ண விலக்குகள் தோரணங்கள் கொண்ட ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டு, திருமணத்திற்கு வருபவர்கள் அமரும் வகையில் குஷன் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. திருமணத்தின் போது வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 
சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சிதர்கள் உத்தரவு பெற்று இந்த திருமணத்தை நடத்தி இருப்பதாகவும், அதில் பட்டு தீட்சிதர் என்பவர் அதற்கான அனுமதி வாங்கி கொடுத்ததாகவும் திருமண வீட்டினர் தெரிவித்துள்ளனர். முதல் நாள் ஆயிரங்கால் மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தியதாகவும், பின்பு அடுத்த நாள் காலை ஆறு ஏழு முப்பது மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.  
இதுகுறித்து நடராஜர் கோவில் பூஜை ஸ்தானிகரும், அறங்காவலருமான (டிரஸ்டியுமான) பட்டு தீட்சதரிடம் கேட்டபோது சிவகாசி பட்டாசு தொழிற்சாலை அதிபரின் மகளுக்கு இக்கோவிலில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நடராஜரின் அருள் என்றும், இதைத்தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.  உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்தும்  காசி விஸ்வநாதர் கோயிலை அரசு சட்டமியற்றி  நிர்வாகத்தை கையகப்படுத்தியது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில்  தனி சட்டம் இயற்றி கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுக்கவேண்டும். வரலாற்று பாரம்பரியம் மிக்க நினைவகமாகவும், கலை பொக்கிஷமாக விளங்கும் நடராஜர்  கோவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

;