politics

img

# மாறிநிக்கடோ

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு குடும்பத்தினரோடு வெளியே வந்த கேரள முதலமைச்சர், பினராயி விஜயனிடம் ஒரு பத்திரிகையாளர் கூடுதலாக கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்ட முற்பட்டபோது, அவசரமாக செல்லவேண்டியுள்ளதால் தன்னை விட்டுவிடும்படி கூறிவிட்டு காரில் ஏறுகிறார். அந்த செய்தியாளர், விடாமல் மைக்கை அவர் முன் நீட்டி அதிக வாக்கு சதவீதம் யாருக்கு சாதகமாக இருக்கும்? என்று கேட்டபோது, முதல்வர் ‘மாறிநிக்கடோ’ (நீங்கி நில்) என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். 

அன்று முழுவதும் கேரளாவிலுள்ள சில ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக போட்டு, பினராயி விஜயன் செய்தியாளரிடம் கோபப்பட்டுவிட்டதாகவும், எரிச்சலாக இருப்பதாகவும் கூறி தங்களின் இச்சையை தணித்து கொண்டனர்.

தோழர் பினராயிக்கு இதுவொன்றும் புதிதல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக பத்திரிகையாளர்களையே சந்திக்காத ஒரு பிரதமர் வாழும் நாட்டில், வாரம் தோறும் பத்திரிகையாளர்களை கூட்டும் முதல்வர் தான் பினராயி விஜயன். எந்த இடத்திலும் எந்த நிலையிலும் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பவர் தான் அவர். ஊடக விளம்பரத்தின் மூலமாக தன்னை வளர்த்துக்கொண்டவர் அல்ல அவர். அமைச்சராக இருந்தபோது லாவலின் நிறுவனத்துடன் கேரள அரசு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்த போது, பல வருடங்களாக இந்த ஊடகங்களால் வேட்டையாடப்பட்டு, நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதற்கு முன்பே ஊழல்வாதி என்று வரிந்து கட்டிக்கொண்டு வசைபாடிய நேர்மையற்ற கார்ப்பரேட் ஊடகப்புலிகளையெல்லாம் சந்தித்து புடம் போட்ட தங்கமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் தோழர் பினராயி விஜயன்.இந்நிலையில், ‘மாறிநிக்கடோ’ என்று அவர் முன்பொருமுறை பயன்படுத்தியது அடுத்த நாளே கேரளாவில் வைரலாகியுள்ளது.

2002-ல் கேரளாவில் மாறாடு என்ற ஒரு கடலோர கிராமத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில் எட்டுப்பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல்வராக இருந்த முதல்வர் ஏ.கே.அந்தோணி, தொழில் துறை அமைச்சர் குஞ்ஞாலிக்குட்டியை அழைத்துக்கொண்டு கலவரப் பகுதிகளை பார்வையிடச் சென்றார். அவர்கள் மாறாடு சென்று காரிலிருந்து இறங்கும்போது, அன்றைய மாநில இந்து முன்னணி தலைவரும், பிறகு பா.ஜ.க வின் மாநிலத்தலைவராகவும், இன்று திருவனந்தபுரம் நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளராகவும் நிற்கும் கும்மனம் ராஜசேகரன் ஒரு கும்பலுடன் வந்து போலீஸ் முன்னிலையிலேயே, அந்தோணியை தடுத்து நிறுத்தி, நீங்கள் மட்டும் செல்லலாம்; வேறு எந்த முஸ்லிமையும் அழைத்துச் செல்லக்கூடாது என்று மிரட்டினார். வியர்த்து வெலவெலத்துப்போன அந்தோணி, குஞ்ஞாலிக்குட்டியை விருந்தினர் மாளிகையில் சென்று இருக்கும்படி கூறிவிட்டு தான் மட்டும் சென்றுவந்தார்.

மறுநாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த பினராயி விஜயன், தன்னுடன் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான எளமரம் கரீம் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.கே.சி.முகமது கோயா ஆகியோரை அழைத்துக்கொண்டு கலவரப் பகுதிகளை பார்க்க சென்றார். முதல் நாள் அந்தோணியை தடுத்து நிறுத்திய கும்மனம் ராஜசேகரன் கும்பல் பினராயி விஜயனிடமும், நீங்கள் மட்டும் செல்லலாம்; உங்களுடன் எந்த முஸ்லிமையும் அழைத்து செல்லக்கூடாது என்று கூறினர். பினராயி அவர்களிடம்,

‘மாறிநிக்கடோ’ அதாவது ‘விலகி நில்’ என்று சொல்லிவிட்டு முன்னோக்கி தான் அழைத்து வந்த அனைவரோடும் பிடரி மயிர் சிலிர்த்த சிங்கம் போல சென்றார். முழுப்பகுதிகளையும் பாரபட்சம் இல்லாமல் பார்வையிட்டு திரும்பினார். 

இந்த வரலாறு தெரியாத சில சின்னபுத்தி ஊடகங்கள் பினராயியைப் பற்றி அவதூறு பொழிகின்றன. அத்தகைய அவதூறுகளுக்கு இம்மாதிரிப்பட்ட பல தகவல்கள் இணையதளங்களிலும் ஊடகங்களின் விவாதங்களிலும் வந்து நிறைந்து பதிலளித்துவிட்டன. 


- எம்.ஏ.உசைன்


;