விளையாட்டு

img

கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டுத் தொடங்க வேண்டாம்... பிபா எச்சரிக்கை 

ஷூரிச்
உலகை உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்கள் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3 கண்டங்களில் கால்பந்து விளையாட்டு பிரபலம் என்பதால் அதிக லீக் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகளில் அதிகப் பணம் கொழிக்கும் என்பதால் கால்பந்து தொடர்புடைய நாடுகள் பண மழையில் நனைவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

கொரோனா அச்சத்தால்  உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதி சுற்றுப் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. லீக்  போட்டிகள் பாதியில் நிற்பதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனப் பல லீக் அணிகள் குமுறி வருகின்றன. குறிப்பாக லீக் போட்டிகள் நடத்தப்படாமல் பல்வேறு நாட்டுக் கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. கொரோனா குறைந்த அடுத்த சில நாட்களில் லீக் போட்டிகளை நடத்தப் பல கிளப் தொடர்களின் நிர்வாகங்கள் அவசர கதியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாக உள்ளன. 

இந்நிலையில், கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டுத் தொடங்குவது ஆபத்தில் முடியும் எனச் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விரிவாகக் கூறியதாவது, " பொதுவாகக் கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தான் முதலில் முக்கியத்துவம் அளிப்பது  வழக்கம்.மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அது தான் பிபாவின் முன்னுரிமை மற்றும் நோக்கம் ஆகும். கிளப் போட்டிகளை நடத்துபவர்களையும் இந்த விதிகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமை 100 சதவீதம் பாதுகாப்பாக இல்லாதபட்சத்தில் கால்பந்து லீக் போட்டிகளைத் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை விடக் காத்திருப்பதே நல்லது" என்றார்.
 

;