விளையாட்டு

img

விளையாட்டுக்கதிர்- மாரத்தான் கிங்!

விளையாட்டு உலகில் சாதிக்க முடியாதது என்பது எதுவுமில்லை என்பதை நிரூபித்து வருகிறார் 34 வயதாகும் தடகள வீரர் எலியுட் கிப்கோஜ். உலகின் தேசியப் பூங்காவை கொண்ட ஒரே நாடு கென்யா. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவின் மக்கள் தொகையும், பரப்பளவும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறிய மாநில அளவில் தான இருக்கும். நடுநிலக் கோட்டில் அமைந்திருக்கும் கென்யாவை உலக வரைபடத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தாலும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் 121 வது இடத்தில் உள்ளது. இங்கு விவசாயமே பிரதானம். பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. இவை அனைத்தும் உலகமயமாக்கல் என்கிற அரக்கன் அந்நாட்டிற்குள் புகுவதற்கு முன்பாகும். கென்யாவிற்குள் புகுந்த ‘நெஸ்லே’ போன்ற பன்னாட்டு கம்பெனிகள் பால் பண்ணைகளை கபளீகரம் செய்து லாபத்தில் கொழித்தன. மக்களின் வாழ்க்கை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையிலும் கென்யா தடகள வீரர்கள் வளர்ச்சியடைந்த வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்கள்.
வல்லமை...
35 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை குடும்பம் ஒன்றில் பிறந்தவர் எலியுட் கிப்கோஜ். இவருக்கு மூன்று சகோதரர்கள். தாய்-தந்தையரின் முகத்தைகூட பார்த்ததில்லை. பள்ளி ஆசிரியை ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்த கிப்கோஜ், சிறு வயதில் விளையாட்டுப் போட்டி எதிலுமே கலந்து கொண்டதும் கிடையாது. வீட்டிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று வந்திருக்கிறார். வேகமாக நடக்கும் அசாதார திறமையை பார்த்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் பேட்ரிக் சாங் அசந்து போனார். அவரால் அடையாளம் காணப்பட்டு 16 வயதில் தடகளத்தில் பயிற்சி எடுத்திருக்கிறார்.
சிறந்த ஓட்டங்கள்...
பயிற்சியின்போதே தேசிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்ததால் 17 வயதில்  உலக ஜூனியர் பிரிவு 5000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் ஓடத் துவங்கினார். அந்த முறை தனிநபர் பிரிவில் பதக்கம் கிடைக்க வில்லை. குழு போட்டியில் தங்கம் வென்றார். இதுவே அவரது முதல் சர்வதேச போட்டியாகும். சீனியர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிக்காக 19 வயதில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்துடன் தங்கப் பதக்கமும் வென்று சாதித்தார். அதன் தொடர்ச்சியாக 2007ஆம் ஆண்டு ஒசாகா நகர் உலக சாம்பியன்ஷிப் போட்டி, 2010ஆம் ஆண்டில் டெல்லி நடைபெற்ற காமன்வெல்த்,  விளையாட்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 3000 மீட்டர் (மிடில் டிஸ்டன்ஸ்) ஓட்டத்தில் முதன்முதலாக கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை தட்டினார்.
சரித்திரம்..
ஆரம்பத்தில் மைதானத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றவர் பிறகு, மைதானத்திற்கு வெளியில் சாலையில் ஓடும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டார். 2013ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த உலக மாரத்தானில் முதல் முறையாக பங்கேற்ற போது தங்கப்பதக்கத்தை கோட்டை விட்டதால் அடுத்த ஆண்டில் தங்கப்பதக்கம் வென்று வேட்டையை துவக்கினார். அந்த வேட்டை இன்னமும் தொடர்கிறது‌ யாராலும் அணை போட முடியவில்லை. தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து  முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நான்கு குழந்தைகளுக்கு தந்தையான கிப்கோஜ், இந்த முறையிலும் தங்கப் பதக்கத்தை வென்றால் தொடர்ந்து மூன்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த உலகின் முதல் வீரர் என்ற புதிய சரித்திரத்தை எழுதுவார்.
புது வரலாறு...
மாரத்தானில் முழு  ஓட்டம் என்பது 42.2 கிலோ மீட்டராகும். இந்த தூரத்தை எந்த ஒரு வீரரும் 2 மணி நேரத்திற்குள்ளாக கடந்ததில்லை என்பதை மாற்றி காட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த கிப்கோஜ், 2017 ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் 25 வினாடிகளில் அந்த சாதனையை தவறவிட்டார். கைக்கு எட்டியது கிட்டாமல் போனாலும் விடுவதாக இல்லை. சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரியா நாட்டில் இங்கிலாந்தின் ரசாயன நிறுவனமான ஐஎன்இஓஎஸ் நடத்திய மாரத்தானில் முழு தூரமான 42.2 கிலோ மீட்டரை ஒரு மணி நேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை 34வது வயதில் அவரே முறியடித்தது மாரத்தான் உலகில் புது வரலாறு படைத்தார்.  மாரத்தானில் தலைச்சிறந்த வீரரான எத்தியோப்பி யாவின் ஹெல்ப் கெப்லர் செலாஸ்ஸியே கூட இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை. இந்த சாதனையை வேறு ஒருவர் முறியடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு கிலோ மீட்டரையும் கடப்பதற்கு கிட்டத்தட்ட 2.50 நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். 2 மணி நேரத்துக்குள்ளாக 42.2 கிலோ மீட்டரையும் கடக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய கிப்கோஜ்-க்கு  துணையாக ஒலிம்பிக் சாம்பியன்ஸ் மேத்யூ சென்ட்ரோவிட்ஸ்,  பால் செலிமா உள்ளிட்ட 42 வீரர்கள் கார், பைக் மற்றும் நடைபயணமாக பின் தொடர்ந்தனர்.  இந்த மாரத்தான் ஓட்டத்தில் கிப்கோஜ், எங்கெல்லாம் சோர்வடைந்தரோ அங்கெல்லாம் ரசிகர்களும் சக வீரர்கள் ஆரவாரம் செய்தும் தண்ணீர், குளுகோஸ், சத்து பானம் கொடுத்த உற்சாகத்தில் ஊக்கமடைந்தார்.  மாரத்தான் போட்டியின்போது சாலையில் ஓடும் வீரர்களுக்காக பக்கவாட்டில் ஆங்காங்கே மேஜைகளில் குடிநீர் பாட்டில்கள், சத்து பானங்கள் இருக்கும். இதை வீரர்கள் எடுத்து குடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனால் இந்த போட்டி அதிகாரப்பூர்வமற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் நாயகன்!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகர் ஒலிம்பிக் மாரத்தானில் ஓடி தனது 32வது வயதில் தங்கப்பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் கென்யாவை இடம் பிடிக்க வைத்த கிப்கோஜ், இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடந்த 5000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் வெள்ளியும், 2004 ஆம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் வெண்கலப் பதக்கமும் வென்று கொடுத்தார்.  மாரத்தான் ஓட்டத்தில் முழு தூரத்தையும் 2 மணி நேரத்திற்குள்ளாக கடந்து சாதனை படைத்த 2019 ஆம் ஆண்டை ‘உலக ஆண்கள் தடகளம்’ என்று பெயர்  சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்று மாரத்தான் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்த கிப்கோஜ், உலக மாரத்தான் போட்டியில் சாதனைக்கு தயாராகி கொண்டிருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னமும் 5 மாதங்களே உள்ளதால் எலியுட் கிப்கோஜ் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போது எகிறிவிட்டது.

;