விளையாட்டு

img

இந்திய கால்பந்து நாயகன் சுனி கோஸ்வாமி காலமானார்.... 

கொல்கத்தா 
1962 முதல் 72 வரை சுமார் 10 ஆண்டுகள் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர நாயகனாகச் சுழன்ற முன்னாள் கேப்டனான சுனி கோஸ்வாமியை ஆசிய கால்பந்து உலகம் அவ்வளவாக மறக்காது. தொடக்கத்தில் மோகன் பகான் கிளப்பில் இணைந்த அவர் அதில் சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார். தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடியதால் 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் சுனி கோஸ்வாமி தலைமையிலான இந்திய கால்பந்து அணி  களமிறங்கியது. சுனி கோஸ்வாமி அசத்தலான வழிநடத்தலால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த தொடரில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. 

இவரது அபார ஆட்டத்தை பார்த்து இங்கிலாந்தைச் சேர்ந்த டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப்  அவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு தன்னை வளர்த்த மோகன் பகான் கிளப்புக்காக மட்டுமே கடைசி வரை ஆடினார். மோகன் பகான் அணிக்கும் 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டு இருப்பதுடன் அந்த கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் சுனி கோஸ்வாமி (145 கோல்கள்) தற்போதுவரை முதலிடத்தில் நீடிக்கிறார். 

கால்பந்தில் ஓய்வு பெற்று பெங்கால் கிரிக்கெட் அணிக்குத் திரும்பி ரஞ்சிக்கோப்பையில் ஆடினார். இதுவரை முதல் தரப் போட்டியில் 1000 ரன்னுக்கு மேல் குவித்துள்ளார். 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1972-ஆம் ஆண்டு அவரது தலைமையிலான பெங்கால் அணி ரஞ்சி கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. சுனி கோஸ்வாமி கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். 

விருதுகள் 
1962-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதைப் பெற்றார். 1963-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது. கடந்த ஜனவரி மாதம் அவரது 82-வது பிறந்த நாளையொட்டி தபால் தலையை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது. 

சுனி கோஸ்வாமியின் மறைவுக்குக் கால்பந்து வீரர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

;