வணிகம்

img

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து - எஸ்பிஐ அறிவிப்பு

ஆன்லைனில் மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் வசூலிக்கப்படும் கட்டணங்களை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு வங்கிகளிடம் குறைந்தபட்ச கட்டணம் பெற்று வருகிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தாங்கள் வழங்கும் கட்டணத்தை ஈடுசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. ஜூன் 11-ஆம் தேதி டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜூலை 1, 2019 முதல் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges, time varying charges) நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண ரத்து மூலம் கிடைக்கும் பலனை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, நெஃப்ட் பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வருகிறது. இந்தக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1, 2019 முதல் முழுமையாக ரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் யோனோ (Yono) மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம். 
 

;