districts

img

"எம்ஜிஆரை மிஞ்சிய எஸ்.பி.வி.!" திருப்பூர் அதிமுகவினர் புலம்பல்

திருப்பூரில் அதிமுக மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல மணி நேரம் தாமதமாக வந்து, காசுக்கு அழைத்து வந்த கூட்டத்தையும் பல மணி நேரம் காக்க வைத்து, மக்கள் செல்வாக்குப் பெற்ற அதிமுக நிறுவனர் எம்ஜிஆரையும் மிஞ்சிவிட்டார் என அதிமுகவினர் புலம்பினர்.

தடபுடல் ஏற்பாடு

திருப்பூர் காங்கயம் ரோட்டில் அதிமுக மாவட்ட அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாலை இந்த அலுவலகத்தை அதிமுகவின் இந்த மண்டல தேர்தல் பொறுப்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி திறந்து வைப்பார் என்று நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக எம்ஜிஆர், ஜெயலலிதா என அக்கட்சித் தலைவர்கள் வருகையின்போதுதான் இந்தளவுக்கு பல பக்கங்கள் விளம்பரம் தருவார்கள். ஆனால் எஸ்.பி.வி வருகைக்கே பல லட்சம் செலவிட்டு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் திருப்பூரில் அவிநாசி சாலையில் தொடங்கி காங்கேயம் சாலை வரை வழி நெடுக அதிமுக கட்சிக் கொடிகள் சாலையில் நடப்பட்டு, அவரை வரவேற்று பல்வேறு கோஷ்டியினரும் பிளக்ஸ் தட்டிகளை ஏராளமாக வைத்திருந்தனர்.

சலிப்படைந்த கூட்டம் 

அத்துடன் வழிநெடுக, அனுப்பர்பாளையம், காந்திநகர், புஷ்பா சந்திப்பு, எம்ஜிபி, பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோயில் சந்திப்பு என ஏழு இடங்களில் அவரை வரவேற்க தாரை, தப்பட்டை, மேள தாளத்துடன் நூற்றுக்கணக்கானோர் நிறுத்தப்பட்டிருந்தனர். அதில் ஏராளமான பெண்கள் புதிய சேலை கட்டி காத்திருந்தனர். 

மாலை 4 மணிக்கு அலுவலகத் திறப்பு விழா என துண்டறிக்கையில் போடப்பட்டிருந்தது. எனவே அப்போதிருந்தே அனைத்து வரவேற்பு மையங்களிலும் பலர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 5 மணி, 6 மணி, 7 மணி என நேரம் செல்லச் செல்ல கால்கடுக்க நின்றிருந்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிட்டார் என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரத்தத்தின் ரத்தங்கள் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கு வரவழைக்கப்பட்டிருந்த தப்பாட்ட இசைக் குழுவினரே சோர்ந்து போய்விட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுப்பதும் பின்னர் பறை இசைப்பதும் என அவர்களும் முடிந்த அளவுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தனர்.

காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டத்தினர் இனிமேலும் பொறுக்க முடியாது என பலர் அங்கிருந்து கிளம்பிச் செல்லத் தொடங்கினர். ஏதேதோ சொல்லி சமாளித்து அந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு அதிமுக பகுதி நிர்வாகிகள் முயற்சித்தனர். எனினும் நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்ததால் சலித்துப் போய் 8 மணியளவில் பலர் கலைந்து சென்றனர். கட்சிக்காரர்களும் முணுமுணுக்கத் தொடங்கினர்.

அதன்பிறகும் ஒன்றரை மணி நேரம் காத்திருக்கப் போவது தெரியாமல் அதிமுகவினர் பலர் சலித்துப் போய் கிடைத்த இடத்தில் ஓரங்கட்டி அமர்ந்தனர். வருவாரா, வர மாட்டாரா என்று தெரியாமல் காத்திருந்தது கூட்டம். ஒரு வழியாக 9 மணிக்கு மேல் ஏறத்தாழ, ஐந்தரை மணி நேரம் தாமதமாக எஸ்.பி.வேலுமணி இங்கு வந்தார். ஆங்காங்கே இருந்தவர்கள் முகத்தில் வெறுப்பையும், கடுப்பையும் வெளிப்படுத்தாமல் செயற்கையாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவரை வரவேற்று சிறப்பாக நடித்தனர். கடைசியாக இரவு 9.45 மணிக்கு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசத் தொடங்கி எதிர்க்கட்சிகளை வசைபாடினார். இரவு 11 மணிக்கு நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவடைந்தது. 

எம்ஜிஆர் அல்ல எஸ்.பி.வி.

இதுவரை அதிமுக வரலாற்றிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருக்கும் இதுபோல் நாங்கள் வரவேற்பு ஏற்பாடு செய்ததில்லை என்று அதிமுகவினர் புலம்பினர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையாக எஸ்.பி.வேலுமணியை வரவேற்க இவ்வளவு ஏற்பாடுகள் செய்து வைத்தோம், ஆனால் நாங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம், ஆட்களைக் கூட்டி வைத்தும் அவர் எங்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுக கிளைக்கழக நிர்வாகிகள் கூறினர்.

அதுவும் எம்ஜிஆர் காலத்தில் இப்போது போல் தகவல் தொடர்பும் இருக்காது, அவருக்கு மக்கள் செல்வாக்கு, ஈர்ப்பு இருந்ததால் நாள் கணக்கில்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாக காத்திருப்பார்கள். ஆனால் இவர் இன்றைய தகவல் தொடர்பு வளர்ந்திருக்கும் சூழ்நிலையில் ஒரு போன் செய்து கூட நிலைமையைச ்சொல்லி இருந்தால் எங்களுக்கு நிலைமையைப் புரிந்து அதற்கேற்ப செயல்பட்டிருப்போம் என்றனர். 

மிகத்தாமதமாக வந்ததுடன் நிகழ்ச்சியில் பேசியபோது தனது தாமதத்துக்கும் விளக்கம் கொடுத்தார் எஸ்.பி.வேலுமணி. கோவையில் கட்சி பிரமுகர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரில் இருந்து கவனித்து முடித்துவிட்டு புறப்பட்டு வருவதாகவும், ஒரே நாளில் 33 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எனினும் அதிமுக நிர்வாகிகள் உள்ளூர அவரை திட்டிக் கொண்டிருந்தனர், பல நிர்வாகிகள் அவர் வரும்போது இருந்ததாக தலையைக் காட்டிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றனர். கூட்டி வரப்பட்ட கூட்டமும் ஏற்கெனவே கலைந்து போக, பெரும்பாலான இருக்கைகள்  காலியாக இருந்தன.

சீட் படுத்தும்பாடு

எஸ்.பி.வேலுமணிக்கு முதல்வர் அளவுக்கு வரவேற்பு, விளம்பரம், கூட்டம் கூட்டிய தேவை என்ன என்று கேட்டபோது, எல்லாம் பதவி படுத்தும் பாடுதான். அவர்தான் இந்த மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளர், முதல்வருக்கு நெருக்கமான முக்கிய புள்ளியாகவும் இருக்கிறார். மூன்று மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் அவரை அனுசரித்து, தாஜா செய்தால்தான் சீட் கிடைக்கும் என்று இப்போது பதவியில் இருக்கும் எம்எல்ஏக்களும், புதிதாக சீட் வாங்கலாம் என எதிர்பார்த்திருக்கும் கட்சிக் காரர்களும் சொந்த காசை செலவு செய்து இந்த தடபுடல் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இவரையெல்லாம் புரட்சித் தலைவர் அளவுக்கு நினைக்க முடியுமா என்று உண்மையைப் போட்டு உடைத்தார் ஒரு ரத்தத்தின் ரத்தமான தொண்டர்.

ஆக, திருப்பூரில் அதிமுகவின் தேர்தல் பணியைத் தொடக்குவதற்கான முதல் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட மாவட்ட அதிமுக அலுவலகத் திறப்பு  விழாவே முதல் கோணலாகப் போய்விட்டது. மக்களிடம் வரவேற்புப் பெறுவது இருக்கட்டும், இப்போது அதிமுகவின் உண்மையான எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.

வே.தூயவன்

;