மாவட்டங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை காவல் துறை அதிரடி சோதனையில் குற்றவாளிகள் கைது

 திருப்பூர், ஜூன் 1 -திருப்பூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத லாட்டரி, புகையிலை விற்பனை ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பணம், லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, புகையிலை, சட்ட விரோதமான மது விற்பனை, குட்கா விற்பனை மற்றும் சீட்டாட்டம் நடைபெற்று வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் சனியன்று தாராபுரம், உடுமலை, பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் தணிக்கையில் ஈடுபட்டனர்.இதில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அம்மன் புத்தக நிலையம் என்னும் கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 48 லாட்டரி சீட்டுகள் மற்றும் 21 ஆயிரத்து 370 ரூபாய் பணம் முதலியவற்றை கைப்பற்றி கடையின் உரிமையாளர் சிவக்குமார் (46) மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் துரை (27), கவியரசன் (22) ஆகியோரைக் கைது செய்தனர்.  மூவர் மீதும் தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதேபோல்  உடுமலை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள முட்புதருக்கு அருகில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் 59 ஆயிரத்து 530 ரூபாய் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இதில் சம்பந்தம்பட்ட குற்றவாளிகளான செந்தில்குமார் (45), சக்திவேல் (51), சசிகுமார் (22) மற்றும் மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர். நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி இடத்தில் சீட்டாட்டத்தில் ஐந்து நபர்கள் ஈடுபட்டனர். அங்கு வைத்திருந்த சீட்டு கட்டு மற்றும் 4 ஆயிரத்து 550 ரூபாய் பணம் முதலியவற்றை கைப்பற்றினர். இதில் சம்பந்தப்பட்ட முருகேசன், செல்வராஜ், விஸ்வநாதன், ராமதாஸ், சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். ஐவர் மீதும் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

;