மாவட்டங்கள்

img

தீ விபத்தில்  வீடு இழந்தவருக்கு நிதியுதவி

தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெரியகத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜான் பவுன்துரை (30), இவரது மனைவி அருள் சோபியா (27) இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இத்தம்பதிகளுக்கு அருள் ஜான்சியா (5) என்ற மகளும், பவுன் ராஜ் (3) என்ற மகனும் உள்ளனர்.  இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள், வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மின்கசிவு காரணமாக குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தில், வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை கருகி சாம்பலானது. வீடின்றி தவித்த தம்பதிகள் அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த, திமுக பிரமுகரும், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவருமான என்.அசோக்குமார், நேரில் சென்று பாதிக்கப்பட்ட தம்பதிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.  மேலும், உடனடியாக ஒரு மாத காலத்திற்கு பயன்படும் வகையிலான ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மளிகை, குடும்பத்திற்கு தேவையான புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினார். உடனடியாக குடிசை வீட்டை மீண்டும் கட்டுவதற்கு ரூ 10 ஆயிரம் வழங்கினார். மேலும் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். அப்போது திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;