மாவட்டங்கள்

img

ஓய்வூதியர் அனைருக்கும் வருமானவரியிலிருந்து விலக்கு அளித்திடுக

தஞ்சாவூர், ஆக. 14-

ஓய்வூதியம் என்பது வருமானம் கிடையாது, எனவே ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத்திலிருந்து வருமான வரி கட்டுவதற்கு அரசு விலக்கு அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட 3ஆவது மாநாடு கோரியுள்ளது.

தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மூன்றாவது மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சாவூர், ஆழி.இராம.அரங்கராசன் நினைவரங்கத்தில், (நான்சி மகாலில்) செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் மூத்த தோழர் எச். சையது முகைதீன் பாட்சா சங்கக் கொடியினை ஏற்றினார். பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின் மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இர. கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சுத்தானந்தம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய பிரதிநிதிகள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தஞ்சை வட்டத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆர். ஜோதி துவக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் இரா. இராஜகோபாலன் வேலையறிக்கையையும், ஜி.பூபதி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பின்னர் பிரதிநிதிகளின் விவாதங்களுக்குப்பின்னர் இவை பிரதிநிதிகளின் கரவொலி மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

புதிய மாவட்ட நிர்வாகிகள்

மாநாட்டில் மாவட்டத் தலைவராக இர. கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளராக இரா. இராஜகோபால், மாவட்டப் பொருளாளராக ஜி.பூபதி ஆகியோர் மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும, இரா.தமிழ்மணி,  தமிழ்செல்வன், சமுதாக்கனி துணைத் தலைவர்களாகவும், ஏ. வெங்கடேசன்,  அன்புமணி, என். தட்சிணாமூர்த்தி இணைச் செயலாளர்களாகவும், டி. சுத்தானந்தம், கோவிந்தராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்களாபகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தீர்மானங்கள்

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டமே அனைவருக்கும் அமல்படுத்தப்பட வேண்டும், 21 மாத நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், தொகுத்துப்பெற்ற ஓய்வூதியத்தைப் பிடித்தம் செய்திடும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாகக் குறைத்திட வேண்டும், ஜாக்டீ-ஜியோ போராட்டத்தில் முன்னணியில்நின்ற ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பழிவாங்கல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பிடித்தம் செய்திடும் இணைய தளத்தில் இருந்துவரும் சீர்கேடுகளைச் சரிசெய்திட வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கருணைத் தொகை வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் என்பது வருமானம் என்று கூறப்பட முடியாது என்பதால் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும் முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயலாளர் எஸ். ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.

கருத்தரங்கம்

மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மாநில செயலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி புதிய வரைவு தேசியக் கல்விக் கொள்கை குறித்து கருத்துரை வழங்கினார்.

ஜி. பூபதி நன்றி கூற மாநாடு நிறைவடைந்தது.

(ந.நி.)

;