மாவட்டங்கள்

img

சாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

கோவையில் மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை சரவணம்பட்டியை அடுத்த கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்  42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜெயந்தி அங்கு படிக்கும்

தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்த மாணவ, மாணவிகளை சாதியை சொல்லி இழிவாக பேசுவதுடன், கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது, கழிவறைக்கு தண்ணீர் எடுத்து வரச்சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவியர் பெற்றோருடன் புகார் அளித்தனர்.

இதனிடையே பொது மக்கள் புகாரின் பேரில் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்  இன்று ஆரம்ப பள்ளியில் பள்ளியில் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியை ஜெயந்தியிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி எவிடென்ஸ் கதிர், தலைமை ஆசிரியர் ஜெயந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை தலைமை  ஆசிரியர் ஜெயந்தி  துன்புறுத்தி இருப்பதும், தகாத வார்த்தையில் பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்து இருப்பதாக எவிடென்ஸ் கதிர் தெரிவித்தார்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் ராசாமணி தன்னிடம்  கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தும் படி மாவட்ட கல்வி அலுவலர் கீதாவிற்கு உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் கீதா, தலைமையாசிரியர் ஜெயந்தி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியை ஜெயந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து  மாவட்ட கல்வி அலுவலர் கீதா உத்தரவிட்டுள்ளார்.
 

;