மாவட்டங்கள்

img

கனமழையால் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்

 மேட்டுப்பாளையம், ஆக.14- தொடர் கனமழையால் ரத்து செய்யபட்டிருந்த உதகை மலைரயில் சேவை மீண்டும் துவங்கியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பொழிந்தபடி இருந்தது. இதனால் மலைரயில் பாதையில் கடந்த ஆக.10 ஆம் தேதி மரங்கள் சாய்ந்தன. மேலும் மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்த காரணத்தினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவானது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆக.13 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்ததை யடுத்து ஏற்கனவே அறிவித்தபடி மூன்று நாட்களுக்கு பின்பு புதனன்று (ஆக.14) மலைரயில் சேவை மீண்டும்  துவங்கியது. கனமழையால் தடைப்பட்டிருந்த மேட்டுப் பாளையம் உதகை இடையேயான பாரம்பரிய மலைரயில் சேவை துவங்கியதையடுத்து இதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

;