மாவட்டங்கள்

img

மத்திய அரசின் அநியாய அபராதம் – லாரிகள் வேலை நிறுத்தம்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக  கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள்  ஓடவில்லை. 

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்படி சிறுசிறு விதிமீறல்களுக்குகூட கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமலாக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் நேரிடையாக வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயுள்ளனர். வாகனத்தின் மொத்த விலையைவிட போக்குவரத்து துறை விதிக்கும் அபராதம் அதிகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் லாரிகளுக்கு அதிகப்படியான அபராத தொகை விதிக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வியாழனன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும்,  அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.இதற்கு மாநில லாரி உரிமையாளர்  சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனை தொடர்ந்து லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்படவில்லை. ஏராளமான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. யூனிபார்ம் போடவில்லை என்றால்  கூட 2000 ரூபாய் அபராத விதிக்கப்படுவதாகவும், அபராதம் செலுத்தும் வரை லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

 
 

;