மாவட்டங்கள்

நாமக்கல் ,அவிநாசி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 8-விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு வழங்க வேண்டும். வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்த தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பேசி தீர்வு காணவேண்டும். கூலி உயர்வுக்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்களை பழி வாங்காமல் ஏறிவரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று ராஜன் தியேட்டர் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க நகர கமிட்டி உறுப்பினர் ஜி.மோகன் உட்பட விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தபால் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஆதார் கார்டு எடுப்பதில் சிக்கல்

அவிநாசி, மே 8-அவிநாசி பகுதியிலுள்ள தபால் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஆதார் கார்டு எடுப்பதில் சிக்கல் நிலவுகின்றது. தனியார் இணையதள சேவை மைய முகவர்கள் மூலம் பொதுமக்கள் ஆதார் கார்டு எடுத்து வந்தனர். இதை பயன்படுத்தி தனியார் இணையதள சேவை முகவர்கள் அதிக கட்டணம் வசூலித்தனர். இதனால் அரசு தனியாரிடம் ஆதார் வழங்கும் சேவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், வங்கிகளில் ஆதார் கார்டு எடுக்கப்பட்டது. தற்போது தபால் நிலையங்களில் ஆதார் கார்டு எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், அவிநாசி தபால் நிலையத்தில், இணையதள சேவை சரியாக செயல்படுவதில்லை எனவும், ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என கூறி பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பெரும்பகுதி தபால் நிலையங்களில் இரண்டு எழுத்தர்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு எழுத்தர் மட்டும் செயல்பட்டு வருகின்றார். மேலும் இணையதளம் மூலம் ஆதார் எடுப்பதற்கு பயிற்சி பெற்ற எழுத்தர்கள் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் விரல் ரேகை, முகவர் பின்கோடு, இணையதளத்தை பயன்படுத்தி ஆதார் கார்டு எடுத்துக் கொடுக்க முடியும். இதனால் கால தாமதம் ஏற்படுவதுடன், குறைவான பொதுமக்களுக்கு ஆதார் கார்டு கிடைக்கிறது. எனவே, ஆதார் கார்டு எடுப்பதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ள தபால் நிலையங்களில், ஊழியர் நியமனம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர் பனியன் தொழிலாளி கொலை: தம்பி கைது

திருப்பூர், மே 8 –திருப்பூரில் செவ்வாயன்று பின்னலாடைத் தொழிலாளியைக் குத்திக் கொலை செய்த சம்பவத்தில், அவரது தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.திருப்பூர் புதூர் பிரிவு செரங்காடு 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் எம்.சிவகுமார் (40). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்குச் சொந்தமான மாடி வீட்டில் தாயார் ரத்தினம்மாள், சகோதரர் ரமேஷ் (36) ஆகியோர் வசித்து வந்தனர். ரத்தினம்மாள் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் சிவகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் ஊரக காவல் துறையினர் அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திங்கள்கிழமை இரவு மது அருந்தியிருந்த சிவகுமாருக்கும், அவரது தம்பி ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷைக் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

;