மாவட்டங்கள்

பாஜகவின் கிளை அலுவலகமாக தேர்தல் ஆணையம்

கோவை, மே 18–தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அலுவலகமாக செயல்படுவதாக சிபிஐ மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினரும், மாநில துணை செயலாளருமான கே.சுப்பராயன் சனியன்று கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார்.சுட்டவர் கோட்சே. இந்த வரலாற்று உண்மையை கமலஹாசன் இந்துத்துவா என்ற கொள்கைக்கு ஆளான கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றான் என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். மத அடையாளத்தை நாம் முன்னிறுத்துவது அவசியமில்லை. நபரின் பெயர் இது, அவரை இயக்கிய கருவி இது என்று மக்களுக்கு சொல்லவேண்டும். அந்ததேசவிரோதியை தேசவிரோதி என்றுதான் அடையாளம் காட்டவேண்டும். அவரை தேசவிரோதியாக மாற்றியது இந்துத்துவா என்ற தத்துவம்தான். அந்த தத்துவத்தால்தான் ஆர்எஸ்எஸ் கட்டமைக்கப்பட்டு செயல்படுகிறது.ஆர்எஸ்எஸ் என்பது இந்துஅமைப்போ, சமுதாய அமைப்போஅல்ல. மாறாக அது விசத்தன்மை கொண்ட பாசிஸ்ட் அரசியல் இயக்கம். மக்களிடம் நிலவுகின்ற தெய்வ நம்பிக்கையை பயன்படுத்தி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி ஜனநாயக நெறிமுறைகளை தகர்ப்பதுதான் ஆர்எஸ்எஸ்சின் அந்தரங்க நோக்கம். அதன் கருவி தான் பாஜக. 

கமலஹாசன் சொன்ன கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டலாம். மாற்றுக் கருத்தை சொல்லலாம் அதற்கு பதிலாகஅவரை தாக்க முற்பட்டிருக்கிறார்கள் என்றால் விபரீதம் எல்லைகடந்து விட்டது. அரவக்குறிச்சியில் முட்டை வீசுகிறார்கள், செருப்பை வீசுகிறார்கள் இதுவெல்லாம் ஜனநாயக முறையா? அவர் தவறாக எதையும் சொல்லவில்லை? நாதுராம் கோட்சே இந்துவாக இருந்தார் என்று அவர்சொல்லி இருக்கிறார். அதை இந்துத்துவா வாதியாக இருந்தார்என்று சொல்லி இருந்தால் நன்றாகஇருக்கும் என்று நாங்கள் சொல்கிறோம். ஒரு தீவிரவாதியை ஒரு தீவிரவாதியாக மட்டும் நாம் பார்க்கலாம், எந்த மத அடையாளத்தையும் நாம் பொருத்தி பார்க்கவேண்டாம்.

சூலூருக்கு கமலஹாசனை வரஅனுமதிக்கவில்லை. கலவரம் நடக்கும் என்றால் அதைத் தடுக்கவேண்டிய கடமை அரசுடையது. சட்டம் ஒழுங்கை நிலை குலைக்கிற சட்ட விரோதிகளை தடுக்கவேண்டிய பொறுப்பில் இருக்கிற தேர்தல் ஆணையம், சட்ட விரோதத்தை பாதுகாக்கிற முறையில்கமலஹாசன் ஜனநாயகப் பூர்வமாக பிரச்சாரம் செய்வதைத் தடுத்து இருப்பது சட்டவிரோதம் ஆகும். இது சட்டத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்கிறவேலை. இதைத்தான் தேர்தல்ஆணையம் செய்திருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் கிளை அலுவலகம். சீட்டுபெறாமலேயே அவர்கள்சீட்டை அதிகப் படுத்துகிற வேலையைதேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கமலின் நாக்கை அறுக்கவேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குபதிவு செய்து உடனடியாக காவல்துறை அவரை கைது செய்ய வேண்டும். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. மதச்சார்பற்ற அணிதான்ஆட்சியை அமைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ்ஆகியோர் உடன் இருந்தனர்.

;