மாநிலங்கள்

img

அணையை உடைத்த நண்டுகளை கைது செய்யுங்கள்...

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், இங்கு ரத்தினகிரி மாவட்டத்திலுள்ள திவாரே அணை உடைந்தது. இந்த சம்பவத்தில், அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திவாரே அணையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அணை உடைந்து ஏழு கிராமங்களை அழித்தது, கேள்விக்கு உள்ளானது. அணை உடைப்பிற்கான காரணத்தை தெரிவிக்குமாறு, மகாராஷ்டிர மாநிலத்தின் பாஜக - சிவசேனா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையிதான், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று புறப்பட்ட மகாராஷ்டிர நீர் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் “இயற்கை சீற்றத்தால் அணை உடைந்துள்ளது; என்ன நடக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அது நடந்தே தீரும்” என்று பொதுமக்களைக் கடுப்பேற்றியதுடன், “நண்டுகளால் அணையின் சுவர்கள் அரிக்கப்பட்டு விட்டன; அணை உடைந்ததற்கு நண்டுகள்தான் காரணம்” என்று மற்றொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.
இதனால், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் மேலும் கொதித்துப் போனார்கள். அதேநேரம், அணை உடைப்பிற்கு, விஞ்ஞானப் பூர்வமான காரணம் ஒன்றைக் கண்டுபிடித்துக் கூறிய, அமைச்சர் தனாஜி சாவந்திற்கு, அவரது பாணியிலேயே பதிலடி கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி “அணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம் என்று அமைச்சர் கருதினால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் நண்டுகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நண்டுகளைக் கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த அவர்கள், நண்டுகளுடன் காவல்நிலையத்திற்கு ஊர்வலம் சென்று, அங்கு நண்டுகளை ஒப்படைத்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த நூதனப் போராட்டம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“ஊழல் மீன் ஒன்றை காப்பாற்றுவதற்காக நண்டுகள் மீது குற்றம்சாட்ட வேண்டாம். திவாரே அணையின் காண்ட்ராக்டரே சிவசேனா எம்.எல்.ஏவான சதானந்த் சவான்தான்; எனவே அவர்தான் குற்றவாளி” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

;