மாநிலங்கள்

img

வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்தால் ஆயுதம் ஏந்துவோம்

பாட்னா:

உத்தரப்பிரதேசம், பீகார்,பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், முன்னறிவிப்பின்றி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திங்களன்று நள்ளிரவு திடீரென இடமாற்றப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், வாக்குப் பதிவு இயந்திரம் ஏற்றப்பட்ட வாகனங்களை மறித்து ஆங்காங்கே தர்ணாவில் ஈடுபட்டனர். 


பீகார் மாநிலத்திலும், மகாராஜ்கன்ஜ் சரண் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பெட்டிகள் இடமாற்றப்பட்டதாக ராஷ்ரியஜனதாதளம் கட்சி புகார் தெரிவித்தது. வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்கு இயந்திரங்களை மாற்றி, பாஜகவை வெற்றிபெற வைப்பதற்காக, தேர்தல் ஆணையமே இவ்வாறு செய்வதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில்தான், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, மோசடிகளை அரங் கேற்ற நினைத்தால், தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரும், மத்திய முன் னாள் அமைச்சருமான உபேந்திர குஷ்வாகா கொந்தளித்துள்ளார்.


“தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான எண்ணத்தை உருவாக்க பாஜக முயற்சித்துள்ளது. பாஜக எப்படியெல்லாம் மக்கள்மனநிலையை மாற்றும் விளையாட்டுக்களை கையாளும் என்பது எங்களுக்கு தெரியும்.பாஜக அரசு மீது மக்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள். அவர் கள் ஒரு போதும் அந்த கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். அதனால்தான் வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்யமுயற்சிகள் நடந்துள்ளன. எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் வாக்கு இயந்திரங்கள் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முஷாபர்பூரில் ஹோட்டல் அறையில் வாக்கு இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற விஷயங்கள் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.


மக்களின் உரிமையை பறிக்கும்செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வாக்கு இயந்திரத்தில் மோசடி நடக்காமல் தடுப்பதற்கு, எங்கள் தொண்டர்கள் எந்தஎல்லைக்கும் செல்வார்கள். அவர் கள் உரிய ஆயுதங்களை கையில் ஏந்திச் செல்வார்கள். தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலைதான் ஏற்படும்” என்று குஷ்வாகா கூறியுள்ளார்.உபேந்திர குஷ்வாகா, மத்திய பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர். அண்மையில்தான் இவரதுராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியானது, பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலு கூட்டணியில் இணைந்தது.

;