மாநிலங்கள்

img

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4000 வீடுகள் கட்டும் பணிகளை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அனுமதி பெறாததால் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களான ஆலந்துறை - காளிமங்கலத்தில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிரமத்தில் 2,500 வீடுகளும், பச்சை வயல் கிராமத்தில் 70 வீடுகளும் என 4,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.
மலை பாதுகாப்பு ஆணைய பகுதிக்குள், வனத்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அனுமதியில்லாமல் வீடுகள் கட்டுப்படுவதாக கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் லோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் வீடுகள் கட்டுவதற்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, நகரமைப்பு துறை, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், மலைப்பகுதியில் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட 'இண்டஸ்' கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த வீடுகள் கட்டப்படுவதாக புகார் தெரிவித்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், வீடுகள் கட்டப்பட உள்ள நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதால் மேற்கொண்டு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதை அடுத்து, முறையான அனுமதிகள் பெறும் வரை வீடுகளை கட்ட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்தது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
 

;