மாநிலங்கள்

img

புதுச்சேரியில்  துயரத்தின் பிடியில் மக்கள் :அரிசிக்கு  தடைபோடும் ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்


புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட் டுள்ள 9 ஆயிரம் டன் அரிசியை உடனே விநியோகம் செய்ய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து  கட்சியின் பிரதேச செயலாளர்ஆர்.ராஜாங்கம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள், முறைச்சாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் விளிம்பு நிலை மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உணவு வழங்க, தனது தொகுப்பிலிருந்து 9000 டன் அரிசியை புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே, நியாயவிலை கடைகள் மூலம் பொருட்கள் வழங்கக்கூடாது அரிசிக்கு பதில் பணம் தான் வழங்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநரின் பிடிவாதத்தால், சில மாதங்களுக்கு பணம் வழங்கப்பட்டு அதுவும்  தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள, மக்களுக்காக மத்திய அரசு  அரிசி, கோதுமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கும் முடிவு செய்து  பல்வேறு மாநிலங்களுக்கு  ஒதுக்கியுள்ளது. 

அதன் அடிப்படையில் புதுச்சேரிக்கும் 9000 டன் அரிச மற்றும் கோதுமை ஒதுக்கியுள்ளது.  இதை விநியோகம் செய்ய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடைகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, துணை நிலை ஆளுநர் தனது முடிவை உடனே மறுபரிசீலனை செய்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்கவில்லை என்றால், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து  துணை நிலை ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
இவ்வாறு ஆர்.ராஜாங்கம் கூறியுள்ளார்.
 

;