states

img

மீனவர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது... கேரள முதல்வர் உறுதி....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மீனவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், மீன்வளத் துறையில் முன்னேற்றம் காணவும் மட்டுமே அரசாங்கம் தலையிடுகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இதுகுறித்து முதல்வர் மேலும் கூறியதாவது: 

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். மீனவர்கள் மோசமாக பாதிக்க இந்த அரசாங்கத்தின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. கடலோரப் பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அதை அங்கீகரிக்கின்றனர். சில பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம் அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்ப முடியும் என்ற மாயை இருக்கக்கூடாது. மீன் வளத் துறையில் சரியான கொள்கையை வகுத்து செயல்படுத்தும் அரசாங்கம்தான் கேரளத்தில் தற்போது உள்ளது. 2019 ஜனவரியில் செயல்படுத்தப்பட்ட மீன்வளக் கொள்கை, ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த தெளிவான நிலைப்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது. இது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முதலாவது விசயம், வெளிநாட்டு டிரோலர்களோ, கப்பல்களோ ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபடுவதை அனுமதிக்காமல் இருக்கவும், இந்திய கடலுக்குள் நுழைவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இரண்டாவதாக, மாநிலத்தின் கடலோர நீரில் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படும். பாரம்பரியமான மீனவர்களுக்கு மட்டுமே வழக்கற்றுப் போன கப்பல்களை மாற்றி புதிய கப்பல்கள் இயக்க அனுமதிக்கப்படும்.

இது அரசாங்கத்தின் கொள்கை. இக்கொள்கை பாரம்பரிய மீனவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகளைக் கூறுகிறது. மீனவர்கள் பிடித்த மீனுக்கான விலையை நிர்ணயிக்கவும் சுதந்திரமாக விற்பதற்கான உரிமையையும் அந்த கொள்கை உறுதி செய்கிறது. ஏதேனும் கார்ப்பரேட்டுகளுக்கு மீனவர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார் என்பது எதிர்க்கட்சித் தலைவரின் நினைவில் இல்லையா? காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் பிரதமரான போதுதான், ஆழ்கடலில் இருந்து மீன்களை வடிகட்டி கொண்டு செல்ல வெளிநாட்டு ஜாம்பவான்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அரசாங்கம் அதற்கு எதிராக போராடும் ஒரு பாரம்பரியத்தால் வழி நடத்தப்படுகிறது.

மீனவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் சமரசமின்றி போராடிய வரலாறு கொண்ட, இன்றும் அப்போராட்டத்தைத் தொடரும் அரசியலே இந்த அரசின் கொள்கையை தீர்மானிக்கிறது. மீன்பிடிக்க ஆழ்கடலை வெளிநாட்டு குத்தகை முதலாளிகளின் லாப வேட்கைக்குத் திறந்து விடுவது இந்த அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இதுவரையிலான காலத்தில் செய்யப்பட்ட பணிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு டிரோலர்கள் அல்லது உள்ளூர் கார்ப்பரேட் டிரோலர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்க அனுமதி உரிமங்கள் வழங்க வேண்டியது மத்திய அரசாகும். கேரள அரசு மற்றும் மீன்பிடி தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து 2017 இல் மத்திய அரசின் கடல் மீன் பிடித்தல் கொள்கையில் ஆழ்கடல் மீன் பிடிப்பதில் வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து வந்த அனுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மாநில அரசின் ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த நிலைப்பாடு இதிலிருந்து தெளிவாகிறது.

மாநில மீன்வளக் கொள்கையின் மற்றொரு முக்கியமான நோக்கம், பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிக்கத் தகுதியான மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களை வைத்திருக்க ஊக்குவிப்பதாகும். ஆழ்கடல் மீன்பிடித்தலில் வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளையோ நிறுவனங்களையோ கேரள கடற்கரையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்ற மாநில மீன்வளக் கொள்கையின் வெளிப்படையான நிலைப்பாட்டிலிருந்து விலகி எந்த திட்டமும் அனுமதிக்கப்படாது. இது எல்டிஎப் அரசாங்கத்தின் பொதுவான கொள்கை. இது சரியானதும்  உறுதியானதுமாகும். அதிலிருந்து ஒரு அங்குலம் கூட இந்த அரசாங்கத்தால் திரும்பிச் செல்ல முடியாது. எனவே, நாங்கள் மீனவர்களுக்கு எதிரானவர்கள் என்று புகைமூட்டத்தை உருவாக்கியாவது தேர்தல் ஆதாயம் பெற முடியும் என்ற மாயை யாரிடமும் இருக்க வேண்டியதில்லை என்று முதல்வர் கூறினார்.

;